இந்தியா - மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்
இந்தியா - மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்
UPDATED : டிச 10, 2024 12:24 AM
ADDED : டிச 10, 2024 12:20 AM

இட்டாநகர்: ஊடுருவல்காரர்களை தடுக்கும் நோக்கில், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள மியான்மர் எல்லையின் 83 கி.மீ., தொலைவுக்கு தடுப்பு முள்வேலிகளை அமைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகின்றனர்.
மோதல்
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை மியான்மருடன் 1,643 கி.மீ., துாரம் எல்லையை பகிர்கின்றன. இதன் வழியாக, லட்சக்கணக்கான அகதிகள் நம் எல்லைப் பரப்பிற்குள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதேபோல் மியான்மருடன் 400 கி.மீ., எல்லையை பகிர்ந்துகொள்ளும் மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் கடந்த ஆண்டு மோதல் வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு, மியான்மரில் இருந்து வரும் ஊடுருவல்காரர்கள் தான் காரணம் என, மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இதை தடுக்கும் நோக்கில், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மர் எல்லையில், தடுப்பு வேலிகளை அமைக்கும்நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
எல்லைச்சாவடி
இந்த பணி, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மணிப்பூரின் மோரே பகுதியில் 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கூடுதலாக 20 கி.மீ., தொலைவுக்கு தடுப்பு வேலிகள் போடப்பட்டன. இதற்கிடையே, மியான்மருடன் நீண்ட எல்லையை பகிரும் அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், முள்வேலி தடுப்புகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, நம் எல்லைச்சாவடி எண், 168 முதல் 175 வரையிலான 83 கி.மீ., தொலைவுக்கு முள்வேலி தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில எல்லைகளில் முள்வேலி அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அந்தந்த மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் கேட்டுக்கொண்டுஉள்ளது.
சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இந்தியா - -மியான்மர் எல்லையில், இந்தியா- -- வங்கதேச எல்லையைப் போன்று முள்கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்காக, 31,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முன்னதாக, இருநாடுகளுக்கு இடையே 16 கி.மீ., தொலைவு உள்ள எல்லையில், எவ்வித ஆவணங்களும் இன்றி சுதந்திரமாக செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வழித்தடங்களில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்தும் செயல்கள் அதிகரித்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதவிர, மணிப்பூரில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் மியான்மரில் இருந்து ஊடுருவிய நபர்கள் தான் காரணம் எனவும் மத்திய, மாநில அரசுகள் குற்றஞ்சாட்டின.
இதையடுத்து, சுதந்திர எல்லை நடமாட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.