பெண்ணை மிதித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய தொழிலாளி சிக்கினார்
பெண்ணை மிதித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய தொழிலாளி சிக்கினார்
ADDED : நவ 04, 2025 06:43 AM

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்டு கொல்ல முயன்ற பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் சோனா, 26. தோழி அர்ச்சனாவுடன் நேற்று எர்ணாகுளம் சென்ற சோனா, அங்கிருந்து டில்லி -- திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரம் புறப்பட்டார். இருவரும் கடைசி பொது பெட்டியில் பயணித்தனர்.
வர்க்கலா அருகே ரயில் வந்தபோது அர்ச்சனா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது துணைக்குச் சென்ற சோனா வாசல் அருகே நின்றார்.
அப்பெட்டியில் பயணித்த ஒருவர் சோனாவை காலால் திடீரென மிதித்து கீழே தள்ளினார்.
இதில், அவர் தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த அர்ச்சனாவையும் ரயிலிருந்து கீழே தள்ள அந்த நபர் முயற்சித்தார்.
இதை கவனித்த மற்ற பயணியர், விரைந்து சென்று அர்ச்சனாவை மீட்டனர். ரயில் பயணியர் கொடுத்த தகவலின் படி, சோனா மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலில் இருந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் பனச்சமுட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும், பெயின்டிங் தொழில் செய்வதும் தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

