ADDED : நவ 12, 2024 05:54 AM
பீதர்: சொத்துக்கு ஆசைப்பட்டு, வாய் பேச முடியாத நபரை மனைவி, பிள்ளைகளே அடித்து கொலை செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பீதரின் சாத்தோளி கிராமத்தில் வசித்தவர் பசவராஜ் ஷேரிகாரா, 52. இவரது மனைவி ஆடம்மா, 48. தம்பதிக்கு பிரபாகர், ஹனுமந்தா என்ற இரண்டு மகன்களும், ரத்னம்மா என்ற மகளும் உள்ளனர்.
பசவராஜ் ஷேரிகாராவுக்கு காது கேட்காது; வாயும் பேச முடியாது. கூலி வேலை செய்து வந்தார். பூர்வீக சொத்துகளில், இவருக்கு பங்கு கிடைத்தது. வாய் பேச முடியாது என்பதால், யாரும் ஏமாற்றி சொத்துகளை எழுதி வாங்கக் கூடும் என்ற பயத்தில், இவரை குடும்பத்தினர் வெளியிலேயே விடுவதில்லை.
இதை பொருட்படுத்தாமல், அவர் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.
இதனால் கோபமடைந்த மனைவியும், பிள்ளைகளும் வீட்டில் அடைத்து வைத்தனர். வெளியே செல்ல வேண்டும் என, பிடிவாதம் பிடித்தார். இம்மாதம் 8ம் தேதி, மரக்கட்டை, கடப்பாரையால் அடித்து பசவராஜை கொலை செய்தனர்.
இயல்பாக இறந்ததாக அக்கம், பக்கத்தினர், உறவினர்களிடம் நாடகமாடினர்.
ஆனால் அதை பசவராஜ் ஷேரிகாராவின் சகோதரர் மல்லிகார்ஜுன ஷேரிகாரா நம்பவில்லை. மன்னள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கு வந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி, பிள்ளைகளே கொலையாளிகள் என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்தனர்.