ADDED : ஜன 11, 2026 12:29 AM

புதுடில்லி: டில்லியில், 53வது உலக புத்தக காட்சி பாரத் மண்டபத்தில் நேற்று துவங்கியது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'பு க் டிரஸ்ட் ஆப் இந்தியா' எனப்படும் தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம், ஆண்டு தோறும் டில்லியில் உலக புத்தக காட்சியை நடத்தி வருகிறது.
இந்தாண்டு, 53வது உலக புத்தக காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று துவக்கி வைத்தார். ஸ்பெயின் நாட்டின் கலாசார அமைச்சர் எர்னெஸ்ட் உர்தாசன் டொமினிக், கத்தார் நாட்டின் கலாசார அமைச்சர் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் தானி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
வரும் 18ம் தேதி வரை ஒன்பது நாட்கள் புத்தக காட்சி நடக்க உள்ளது; அனுமதி இலவசம். 35க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,00 0க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
' இந்திய ராணுவ வரலாறு; வீரமும் ஞானமும்' என்பது இந்த ஆண்டு புத்தக காட்சியின் கருப்பொருளாக உள்ளது. அதற்கு ஏற்ப சிறப்பு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு ராணுவம் பற்றிய 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஆர்ஜுன் பீரங்கி, ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பல், தேஜஸ் விமானம் ஆகியவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேச பக்திப் பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட, 150 ஆண்டுகள், சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றின் புகைப்பட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தக காட்சியில் 600 கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1,000 பேச்சாளர்கள் பேச உள்ளனர்.

