உலக உளவு அமைப்புகளின் மாநாடு: துளசி கப்பார்ட் பங்கேற்பு
உலக உளவு அமைப்புகளின் மாநாடு: துளசி கப்பார்ட் பங்கேற்பு
ADDED : மார் 16, 2025 07:18 PM

புதுடில்லி: டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உலக உளவு அமைப்புத் தலைவர்களின் மாநாட்டில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி பங்கேற்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறை பொறுப்பேற்ற நிலையில், அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் நியமிக்கப்பட்டார். முதன் முறையாக இந்தோ, பசிபிக் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அவர், அப்பயணத்தின் அங்கமாக இன்று இந்தியா வந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில், உலகின் சிறந்த உளவு அமைப்புத் தலைவர்களின் மாநாடு டில்லியில் இன்று நடந்தது. பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களைச் சமாளிக்க உளவுத்தகவல் பகிர்வு வழிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் உயர்மட்ட மாநாட்டில் துளசி கப்பார்ட் கலந்து கொண்டார்.
கனடா நாட்டின் உளவுப் பிரிவு தலைவர் டேனியர் ரோஜர்ஸ், இங்கிலாந்து புலனாய்வு அமைப்பான எம்-16 அமைப்பின் தலைவர் ரிச்சர் மூரே மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த புலனாய்வுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுடனான இந்த சந்திப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.