இந்தியாவின் பேச்சை உன்னிப்பாக உற்றுநோக்கும் உலக நாடுகள்: ராஜ்நாத் சிங் பேச்சு
இந்தியாவின் பேச்சை உன்னிப்பாக உற்றுநோக்கும் உலக நாடுகள்: ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : ஏப் 03, 2024 01:33 PM

லக்னோ: இந்தியா பேசுவதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில், நடந்த பேரணியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 2009ம் ஆண்டு நான் காஜியாபாத்தில் போட்டியிட வந்த போது, இது கடினமான தொகுதி என சொன்னார்கள். எங்கள் கட்சித் தலைவர்களும் என்னிடம், நீங்கள் கட்சியின் தேசியத் தலைவர் என்பதால் நீங்கள் காஜியாபாத்தில் போட்டியிட வேண்டாம். முந்தைய தேர்தலில் இந்தத் தொகுதியை நாம் இழந்தோம் என்றும் சொன்னார்கள்.
இருப்பினும், காஜியாபாத்துடன் எனக்கு பழைய உறவு இருந்ததால், இங்கிருந்து போட்டியிட முடிவு செய்திருந்தேன். காஜியாபாத்தில் நான் போட்டியிட்டால் மக்களின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும் என்று எனது கட்சித் தலைவர்களிடம் கூறியிருந்தேன். அது நடந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவை உலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பிரதமர் மோடி தனது ஆட்சியின் போது அதிசயம் செய்தார். இந்தியா பேசுவதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த பிரதமராலும் செய்ய முடியாததை, நமது பிரதமர் மோடி செய்தார். ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். போரின் போது இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினர். இவ்வாறு அவர் பேசினார்.

