இருப்பிடத்தை காட்டும் எக்ஸ் சமூக வலைதளம்: வந்தது புது அப்டேட்
இருப்பிடத்தை காட்டும் எக்ஸ் சமூக வலைதளம்: வந்தது புது அப்டேட்
ADDED : நவ 21, 2025 08:24 PM

புதுடில்லி: ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், எக்ஸ் சமூக வலைதள கணக்குகளின் இருப்பிடம் குறித்து பயனர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கோடிக்கணக்கான கணக்குகள் உள்ளன. அவற்றில் போலி கணக்குகள், ஆட்டோமெட்டட் கணக்குகள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கணக்குகள் அடக்கம். அதில் இருந்து பதிவுகள் வெளியாகின்றன. ஆனால், அவை எங்கிருந்து வருகிறது என தெரியாமல் பல பயனர்கள் குழம்பி காணப்பட்டனர்.
இந்நிலையில் பயனர்களின் குழப்பங்களை போக்கும் வகையில், எக்ஸ் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், ஒரு கணக்கு தொடங்கிய தேதி, இருப்பிடம், எத்தனை முறை பயனாளர்கள் பெயர் மாற்றப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
முதலில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொண்டு வரப்பட்ட இந்த மாற்றங்கள் தற்போது பெரும்பாலானோருக்கு இன்று முதல் இந்த மாற்றங்கள் தெரியவந்துள்ளன. பயனர்கள், யாருடன் கலந்துரயைாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பார்ப்பது எப்படி
ஒரு குறிப்பிட்ட கணக்கின், இந்த விவரங்களை தெரிந்து கொள்ள அந்த கணக்கின் புரோபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு, பயனர் பெயருக்கு கீழ் இருக்கும் அந்த கணக்கு துவக்கப்பட்ட தேதியை கிளிக் செய்தால், புதிய பக்கம் ஒன்றும் துவங்கும். அதில் அந்த கணக்கின் விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இதனை பார்த்த பயனர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

