விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு
விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு
ADDED : ஜூன் 29, 2025 01:37 AM

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு, 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் கடந்த, 12ம் தேதி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இப்பிரிவின் தலைவராக இயக்குநர் ஜெனரல் யுகேந்தர் உள்ளார்.
இவரது தலைமையின் கீழ் விமான மருத்துவப் பிரிவு, விமான போக்கு வரத்து கட்டுப்பாடு, அமெரிக்க அரசின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி அறையில் பதிவாகும் உரையாடல்கள் மற்றும் விமான இயக்க பதிவுகள் உள்ளிட்டவை அடங்கிய கருப்பு பெட்டிகளை பாதுகாப்பு படையினர் மீட்டு, விசாரணை குழுவிடம் கடந்த 24ம் தேதி ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரம்அடைந்துள்ளது.
இந்நிலையில், விசாரணை குழு தலைவரான யுகேந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மத்திய ரிசர்வ் படை
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.