இரவில் இரு பிரிவாக பாடம் கற்பிப்பு நல்ல பெயரை வாங்க ஊக்குவிக்கும் யாத்கிர் அரசு பள்ளி
இரவில் இரு பிரிவாக பாடம் கற்பிப்பு நல்ல பெயரை வாங்க ஊக்குவிக்கும் யாத்கிர் அரசு பள்ளி
ADDED : பிப் 10, 2024 11:31 PM

யாத்கிர் மாவட்டம், கக்கேரா நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. முதலாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் 568 மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.
ஏழு அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களும், எட்டு கவுரவ ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர். இந்த பள்ளியை பார்க்கும்போது, அரசு பள்ளி என்று யாரும் சொல்ல முடியாது.
அந்த அளவுக்கு, லட்சக்கணக்கில் நன்கொடை வாங்கும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் டிஜிட்டல் பலகைகளில் தான் பாடம் கற்பிக்கப்படுகிறது.
சுத்தமான குடிநீர்
சுத்தப்படுத்தப்பட்ட சுத்தமான குடிநீர், கணினி கல்வி வசதியும் உள்ளன. குறிப்பாக, மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் மட்டும் கதவு மூடாத இரவு பள்ளி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 81 நாட்கள் இரவு பள்ளி இயங்கும். இங்குள்ள தங்கும் விடுதி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் மட்டுமே இரவு பள்ளிக்கு வர வேண்டும்.
மாணவியருக்கு 'ஆன்லைன் கல்வி' வசதி செய்யப்பட்டுள்ளது.
இரவு 7:30 மணி முதல் இரவு 11:00 மணி வரையில் ஒரு குழு மாணவர்களுக்கும்; அதிகாலை 4:30 மணி முதல் காலை 7:30 மணி வரை மற்றொரு குழு மாணவர்களும் படிக்கின்றனர்.
இவர்களுக்கு வாரந்தோறும் ஒவ்வொரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் எடுப்பர்.
சரியாக படிக்காத மாணவர்களுக்கும் இரவு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் யோகா, தியானம், உடற்பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
மாணவர்களிடையே ஏற்படும் தேர்வு பயத்தை போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 'அச்சம் கொள்ளாதீர்' என்ற சிறப்பு வகுப்பும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மன தைரியம் ஏற்படும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வாரம் முழுதும் படித்த பாடங்கள் மீது, சனிக்கிழமைகளில் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. சரியான பதில் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதிக கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. சரியாக பதில் சொல்லாதவர்களை, 'அடுத்த முறை நன்றாக படித்துவிட்டு வாருங்கள்; உங்களாலும் பதில் சொல்ல முடியும்' என்று தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.
இதற்கிடையில், திறந்தவெளியில் அமரவைத்து ஒன்றாக படித்து பழக்குகின்றனர். அரசியல் அமைப்பு முகப்பு உரை மீது வாரந்தோறும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.
பல போட்டிகள்
கபடி, கோகோ, வாலிபால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும்;
கட்டுரை, கவிதை, பட்டிமன்றம், பேச்சு போட்டி என மாணவர்களுக்கு தகுந்தாற்போன்று இலக்கியம் சம்பந்தமான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இத்தனைக்கும் முழு காரணம், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுமே.
செல்வந்தர்கள், தன்னார்வ அமைப்புகளை தொடர்பு கொண்டு, அவர்களிடம் பணமாக நன்கொடை வாங்காமல், பொருளாக வாங்கி மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த வசதிகளை பார்த்து, நடப்பு கல்வி ஆண்டில் மட்டுமே, வெவ்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, 30 மாணவர்கள் கக்கேரா அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -