ADDED : மார் 19, 2024 11:01 PM

மைசூரு : லோக்சபா தேர்தலில், முஸ்லிம், கிறிஸ்துவ தலைவர்களின் ஆதரவும் தேவை என்பதால், அவர்களை, மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலில் மைசூரு பா.ஜ., வேட்பாளராக, மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, பிரசாரத்தை யதுவீர் துவக்கி விட்டார். தினமும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் கேட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, காலங்காலமாக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வரும் முஸ்லிம், கிறிஸ்துவ மத தலைவர்களையும் சந்திக்க துவங்கி உள்ளார்.
முதல் கட்டமாக நேற்று முன்தினம் மைசூரு பன்னிமண்டபம் அருகில் உள்ள பேராயர் இல்லத்தில், மைசூரு மறை மாவட்ட அபோஸ்தலிக் நிர்வாகி பெர்னார்ட் மோரசை, யதுவீர் சந்தித்து ஆசி பெற்றார். அத்துடன், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
இதையடுத்து, நேற்று சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளை, யதுவீர் சந்தித்து பேசி ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், மைசூரு அரண்மனை முன்புள்ள கன் ஹவுஸ் சதுக்கத்தில், சிவராத்திரி ராஜந்திர சுவாமிகள் சிலை வைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதற்காகவே மடாதிபதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
விரைவில் முஸ்லிம் மத தலைவர்களையும் சந்தித்து யதுவீர் ஆதரவு கேட்க உள்ளார்.
மைசூரு மறை மாவட்ட அபோஸ்தலிக் நிர்வாகி பெர்னார்ட் மோரசை, பா.ஜ., வேட்பாளர் யதுவீர் சந்தித்து ஆசி பெற்றார். இடம்: பேராயர் இல்லம், மைசூரு.

