எடியூரப்பா கை ஓங்கியது: லிங்காயத்துகளுக்கு அதிக வாய்ப்பு
எடியூரப்பா கை ஓங்கியது: லிங்காயத்துகளுக்கு அதிக வாய்ப்பு
ADDED : மார் 14, 2024 10:21 PM
- நமது நிருபர் -முன்னாள் முதல்வர் எடியூரப்பா சார்ந்த லிங்காயத் சமுதாயத்துக்கு பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை, அனைத்து தேர்தல்களிலுமே ஜாதிகளின் அடிப்படையில் அரசியல் செய்வது காலம், காலமாக நடந்து வருகிறது. குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஆதரவே, தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது.
அந்த சமுதாயங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ, அந்த கட்சி தான் அதிகாரத்துக்கு வருகிறது என்பதற்கு கர்நாடகா முன் உதாரணமாக திகழ்கிறது. இதனால், ஜாதிவாரி யாக வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை, அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றுகின்றன.
ஆதரவாளர்கள்
மாநிலத்தில், 20 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 15 - 16 வேட்பாளர்கள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக பா.ஜ.,வில் எடியூரப்பாவுக்கும், தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷுக்கும் பல ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடும், மோதலும் உள்ளன. சில நேரங்களில் பகிரங்கமாகவும், சில நேரங்களில் உள்ளடி வேலையாலும் பூசல் வெடித்துள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, எடியூரப்பா கூறிய பலருக்கு சீட் வழங்காததே, பா.ஜ., தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
குறிப்பாக, அவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியது தான் காரணம் என்றும் பா.ஜ., வட்டாரத்திலேயே பேசப்பட்டது. இதனால், லோக்சபா தேர்தலில் அவர் சிபாரிசுப்படி அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
8 பேர்
அதுவும், அவர் சார்ந்த லிங்காயத் சமுதாயத்தினருக்கு தான் அதிகபட்சமாக எட்டு பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது கட்டமாக, எஸ்.சி., - 3, ஒக்கலிகர், பிராமண சமுதாயங்களுக்கு தலா - 2; எஸ்.டி., பன்ட்ஸ், பில்லவா, பலிஜா, ஷத்திரியா ஆகிய சமுதாயங்களில் தலா ஒருவருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 20ல் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள எட்டு தொகுதிகளில், மூன்று ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்படுவதால், இன்னும் ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

