ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்? சம்பய் சோரன் ராஜினாமா
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்? சம்பய் சோரன் ராஜினாமா
UPDATED : ஜூலை 03, 2024 08:39 PM
ADDED : ஜூலை 03, 2024 04:57 PM

ராஞ்சி: பண மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போதைய முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். சில மாதங்களுக்கு பிறகு, ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார்.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் சம்பய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இண்டியா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து சம்பாய் சோரன் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கவரனர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்தார். முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.
அதிருப்தி
முன்னதாக, சம்பய் சோரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் வகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிர்வாக தலைவர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.