யெஸ் கியூஸ் மீ... மேட்ச் பாக்ஸ் இருக்கா கஞ்சா 'பத்தவைக்க' போலீசிடம் கேட்ட மாணவர்கள்
யெஸ் கியூஸ் மீ... மேட்ச் பாக்ஸ் இருக்கா கஞ்சா 'பத்தவைக்க' போலீசிடம் கேட்ட மாணவர்கள்
ADDED : அக் 22, 2024 11:30 PM
மூணாறு:கஞ்சா பீடியை பற்ற வைக்க போதை பொருள் தடுப்பு அலுவலகத்தினுள் சென்று பள்ளி மாணவர்கள் தீப்பெட்டி கேட்ட அதிர்ச்சி சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.
கேரளா, திருச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பஸ்களில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். சிலர் ஒன்று சேர்ந்து கஞ்சா உள்பட போதை பொருட்களை வாங்கியுள்ளனர். வழியில் அடிமாலியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். சில மாணவர்கள் அந்த அலுவலகத்தினுள் சென்றனர். அங்கு அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இன்ஸ்பெக்டர் ராகேஷ் பி.சிராயத் அவர்களை தடுத்து நிறுத்தினார். சோதனையிட்டபோது 5 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கஞ்சா எண்ணை, கஞ்சா பீடி உள்பட பல்வேறு வகை போதை பொருட்கள் அவர்களிடம் சிக்கின.
விசாரணையில் கிடைத்த ருசிகர தகவல்:
அடிமாலியில் சாப்பிட்டதும் கஞ்சா புகைக்க எண்ணியுள்ளனர். தீப்பெட்டி இல்லை. அருகில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக பின் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி இருந்ததை பார்த்ததும் அது ஒர்க் ஷாப் என நினைத்து தீப்பெட்டி கேட்க உள்ளே நுழைந்துள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து தப்ப முயன்றபோது சிக்கியுள்ளனர்.
ஆசிரியர்களை அழைத்து சம்பவம் குறித்து கூறிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். போதை பொருட்கள் வைத்திருந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.