sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லியில் நேற்று...

/

பார்லியில் நேற்று...

பார்லியில் நேற்று...

பார்லியில் நேற்று...


ADDED : நவ 28, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதிர்க்கட்சியின் தொடர் அமளி இரு சபைகளும் முடங்கின

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசிக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், அதானி லஞ்ச விவகாரம், உ.பி., சம்பல் கலவரம் விஷயங்களை விவாதிப்பதற்காக, லோக்சபா அலுவல்களை ரத்து செய்ய வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், லோக்சபா மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும் அமளி நீடித்ததால் வேறு வழியின்றி, லோக்சபா நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோரிக்கைகளை நிராகரித்ததால் அவரிடம், எம்.பி.,க்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் முதலில் அரை மணி நேரத்திற்கு, சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும், கூச்சல் குழப்பம் ஏற்படவே, ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

சிட்டாக பறந்த எம்.பி.,க்கள்

லோக்சபா அமளியின்போது தி.மு.க., இளம் எம்.பி.,க்களில் பலரை காணமுடியவில்லை. வந்திருந்த சிலரும், இரு சபைகளும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிந்தே மதியம் 2.30 மணி விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், காலையில் சபை ஒத்திவைக்கப்பட்ட உடன் தி.மு.க., - எம்.பி.,க்களின் கார்கள் விமான நிலையத்தை நோக்கி சிட்டாக பறந்தன. தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காகவே, சென்னைக்கு, இந்த ஒருநாள் அதிரடி டிரிப் என கூறப்படுகிறது.

பரந்துார் விமான நிலையத்துக்கு ஒப்புதல் கேட்டுள்ள தமிழகம்

'காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான, 'சைட் கிளியரன்ஸ்' எனப்படும் இடத்தேர்வு ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கொள்கை முடிவுக்கு ஒப்புதல் கேட்டு, தமிழக அரசின் 'டிட்டோ' நிறுவனவத்திடமிருந்து, விண்ணப்பம் வந்துள்ளது' என்று மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ராஜ்யசபாவில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு மற்றும் கொள்கை முடிவு ஆகியவற்றுக்கான ஒப்புதல்களை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதள ஆபாசங்களை

தடுக்க ஒருமித்த கருத்து தேவை

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் பாலியல் ரீதியான ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை தடுக்க தற்போது உள்ள வழிமுறைகள் குறித்தும், அவற்றை தடுக்க சட்டங்களை கடுமையாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் பா.ஜ., - எம்.பி., அருண் கோவில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் போன்ற பதிவுகளை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பார்லிமென்ட் நிலைக்குழு இந்தப் பிரச்னையை பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக இன்னும் கடுமையான சட்டங்களை உருவாக்க ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

முன்பு செய்திகளை வெளியிட ஆசிரியர் குழு என ஒன்று இருந்தது. அவர்கள் எது சரி, தவறு என முடிவு செய்தனர். இன்று சமூக வலைதளங்களில் கட்டுபாடற்ற சுதந்திரம் உள்ளது. அதில் தான் ஆபாசமும் நிரம்பியுள்ளது.

இவ்வாறு தன் பதிலில் கூறினார்.

அதிவேக ரயில்கள் தயாரிப்பில்

சென்னை ஐ.சி.எப்.,

பா.ஜ., - எம்.பி.,க்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் புதிய ரயில்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலை, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக ரயில்களை வடிவமைத்து, உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் வெற்றியை தொடர்ந்து, இந்த திட்டத்தை துவங்கியுள்ளோம்.

அதிவேக ரயில்களுக்கான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சிக்கலான, தொழில்நுட்பம் மிகுந்த செயல். ஒரு ரயில் பெட்டி தயாரிக்க 28 கோடி ரூபாய் செலவாகும். அதில் பயணியருக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'சென்னை மெட்ரோவுக்கு

நிதி கேட்கவில்லை'

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர் டொகான் சாகூ, ராஜ்யசபாவுக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதில்:

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்ட செலவு, 63,246 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை இத்திட்டத்தின் 38.64 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முழுமையாக முடியும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டங்களை நிறைவேற்றக்கூடிய நிறுவனம் கேட்கும் நிதியை, மத்திய அரசு, தன் நிதி பங்கீடாக, வழங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இது வரையில், மத்திய அரசிடம் நிதி உதவி தேவை என்று கேட்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us