ADDED : டிச 02, 2025 05:09 AM
விமானங்களில் ஜி.பி.எஸ்., பிரச்னை
ராஜ்யசபாவில், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 10ல், செயற்கைக்கோள் அடிப்படையிலான நடைமுறைகளை பயன்படுத்தி தரையிறங்கிய சில விமானங்கள், ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டன. எனினும், அந்த விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின. தரைவழி வழிகாட்டி தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் பிற ஓடுபாதைகளில் இந்த பிரச்னை ஏற்படவில்லை. கொல்கட்டா, அமிர்தசரஸ், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய விமான நிலையங்களிலும் இந்த ஜி.பி.எஸ்., பிரச்னை ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
87 கடன் செயலிகள் முடக்கம்
லோக்சபாவில், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறியதாவது:
விரிவான ஆய்வுக்கு பின், இதுவரை மொத்தம், 87 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் முடக்கப்பட்டு உள்ளன. ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும், கம்பெனிகள் சட்டம் - 2013-ன் கீழ், அவ்வப்போது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, “கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் மொத்தம் 2.04 லட்சம் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன,” என்றார்.
99% விண்ணப்பங்களுக்கு தீர்வு
லோக்சபாவில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியதாவது:
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 1995ன் கீழ், ஓய்வூதியம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 99 சதவீதம் தீர்க்கப்பட்டு விட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரத்தில் உடனுக்குடன் முடிவெடுக்கப்படுகிறது. அதே போல், அவசர தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்களும் உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

