ADDED : நவ 29, 2024 02:13 AM
விமான நிலையம் தயார்
வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் கேள்விக்கு, சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோகல் அளித்துள்ள பதில்:
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், வேலுார் விமான நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. சென்னை -- பெங்களூரு இடையில், கோட் - பி2 ரக 19 இருக்கைகள் கொண்ட ஏர் கிராப்ட் விமானங்களை இயக்குவதற்கு தயாரான நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தஞ்சையில் எப்போது?
தஞ்சை தி.மு.க., - எம்.பி., முரசொலி கேள்விக்கு, சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோகல் அளித்துள்ள பதில்:
தஞ்சாவூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையம் உள்ளது. இங்கு, உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கு உண்டான, 'டெர்மினல் பில்டிங், கார் பார்க்கிங்' உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, இந்திய விமான நிலைய அதிகார ஆணையம் 56.16 ஏக்கர் நிலப்பரப்பை தன் வசம் எடுத்துள்ளது.
இருப்பினும், தேசிய நெடுஞ்சாலை 36ல் இருந்து, விமான நிலையத்திற்கு நேரடியாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு உண்டான நிலம் இன்னும் முடிவாகவில்லை. இதை கையகப்படுத்தி தரும்படி தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிலம் கிடைத்தவுடன், விமான நிலைய உட்கட்டமைப்புகளை அமைப்பதற்கான பணிகள் துவங்கி விடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உணவு பதப்படுத்தும் மையம்
ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் ஆகியோரின் கேள்விக்கு, உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ரன்வீர் சிங் அளித்துள்ள பதில்:
'பிரதமர் விவசாய சம்படா யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 1,187 உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எளிதில் அழுகும் அல்லது கெட்டுப்போகும் பால் மற்றும் அது தொடர்பான பொருட்கள், இறைச்சி, முட்டை, கடல் உணவு வகைகள், சிறுதானியங்கள், வாசனை பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், உடனடியாக சமைக்கவும், சாப்பிடவும் கூடிய பொருட்களை பதப்படுத்தி வைத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 446 கோடி ரூபாய் செலவில், 84 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 248 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டு விட்டது. இவை நிறைவேற்றப்பட்டவுடன், 4 லட்சத்து 94,023 விவசாயிகள் பயன் அடைவர்.
இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற இடத்தில் பதப்படுத்துதல் மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பின், இதன் வாயிலாக 4,000 விவசாயிகள் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

