ADDED : பிப் 09, 2025 01:33 AM

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள, ஸ்ரீகாரியம் பகுதியில் இயங்கி வரும், மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின், முதன்மை விஞ்ஞானி சந்தோஷ் மித்ரா:
'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' என்ற, 'இ - கிராப்' கருவியை 2014ல் உருவாக்கினேன். மண்ணின் ஈரப்பதம், தட்ப வெப்பநிலை, பயிர்களின் தன்மைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இக்கருவி சேகரித்து, அதற்கேற்ப நீர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை குறித்த ஆலோசனைகளை, விவசாயிகளின் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும்.
கிட்டத்தட்ட 4 அடி உயரம் கொண்ட இந்த கருவி, சோலார் பேனல், சென்சார் சாதனங்கள், இணையம், கணினி மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாயிலாக இயங்குகிறது.
பயிர்களுக்கு நீர் மற்றும் உர மேலாண்மை குறித்து, தொடர்ச்சியாக ஆலோசனை வழங்குவதற்காகஇந்த கருவியை உருவாக்கினேன்.
அதன்பின் விவசாயிகளை சந்தித்து, இந்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினோம். விவசாயிகளின், நிலம் குறித்த விபரங்களை இந்த கருவியில் பதிவு செய்தோம்.
இக்கருவி வழங்கும் ஆலோசனைகளின்படி தங்களுடைய பயிர்களுக்கு நீர் மற்றும் உர மேலாண்மை மேற்கொள்ளுமாறு விவசாயிகளிடம் தெரிவித்தோம்.
இதை செயல்படுத்த ஊக்கத் தொகை தருவதாகவும் கூறினோம்; ஆனாலும், 'இது எந்த அளவுக்கு சாத்தியப்படும்; நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது' என்று விவசாயிகள் தயங்கினர்.
மிகுந்த நம்பிக்கை அளித்த பின், இக்கருவி வழங்கிய ஆலோசனைகளை செயல்படுத்தினர். வழக்கத்தைவிட கூடுதல் விளைச்சல் கிடைத்தது; அதேசமயம், உரங்களுக்கான செலவு, 50 சதவீதம் குறைந்திருந்தது.
இது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.
இந்திய தோட்டக்கலை துறையில், 'மிகச் சிறந்த தொழில்நுட்பம்' என, இக்கருவி மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் எனக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளன.
இந்த கருவி, 20 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள பயிர்களை கண்காணித்து உரம் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். ஊராட்சிக்கு ஒரு கருவி பொருத்தினால் போதும். இக்கருவியின் விலை 3 லட்சம் ரூபாய்.
விவசாயிகள் பயன்படும் வகையில் இந்த கருவியை வாங்கி பயன்படுத்த, இங்குள்ள சில ஊராட்சிகளின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் ஒரு தனியார் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கருவி தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தினர், 'இ - கிராப்' கருவிகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர்.
தொடர்புக்கு:
94951 55965.

