சிவகுமார் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார் யோகேஸ்வர்
சிவகுமார் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார் யோகேஸ்வர்
ADDED : அக் 24, 2024 12:51 AM

பெங்களூரு, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் நேற்று மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
கர்நாடகாவின், ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, பா.ஜ., சார்பில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் விரும்பினார்.
ஆனால் ம.ஜ.த., தலைவரும், மத்திய கனரக தொழில் அமைச்சருமான குமாரசாமிக்கு, சென்னப்பட்டணாவை பா.ஜ.,வுக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லை. மகன் நிகில் அல்லது மனைவி அனிதாவை களம் இறக்க அவர் விரும்பினார். 'வேண்டுமானால், ம.ஜ.த., சின்னத்தில் யோகேஸ்வர் போட்டியிடட்டும்' எனக்கூறினார். ஆனால் இதில் யோகேஸ்வருக்கு உடன்பாடு இல்லை.
பா.ஜ., தலைமை தன் பெயரை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த யோகேஸ்வருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு யோகேஸ்வர் சென்றார். காங்கிரசில் இணைவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. பின், அவர்கள் இருவரும் முதல்வர் இல்லத்திற்குச் சென்றனர். காங்கிரசில் இணைய யோகேஸ்வர் விருப்பம் தெரிவித்து, சித்தராமையா காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதைத்தொடர்ந்து யோகேஸ்வர், துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.