ADDED : அக் 28, 2024 12:16 AM

மதுரா: ஹிந்துக்களின் ஒற்றுமை குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஹிந்து ஒற்றுமை குறித்து யோகி ஆதித்யநாத் பேசினார்.
'நாட்டைவிட எதுவும் உயர்ந்ததல்ல. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் தான், நாட்டுக்கு எழுச்சி கிடைக்கும். நாம் பிளவுபட்டால், வீழ்வோம். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது' என, யோகி ஆதித்யநாத் அப்போது பேசினார்.
இந்நிலையில், மதுராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தேசிய மாநாட்டில் பங்கேற்ற, அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியதாவது:
நாம் பிளவுபட்டால், வீழ்வோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியது சரியான கருத்தாகும்.
மதம், ஜாதி, கொள்கைகளின் அடிப்படையில், ஹிந்துக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
மொழி, மதம், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று நாம் பிளவுபட்டால், வீழ்வோம். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே, ஹிந்து மதம் நிலையாக இருக்கும். ஹிந்துக்களிடையே ஒற்றுமை தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.