ஓய்வு பெற்றதும் உடனே சுயசரிதை எழுத முடியாது: அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுகிறது அரசு
ஓய்வு பெற்றதும் உடனே சுயசரிதை எழுத முடியாது: அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுகிறது அரசு
ADDED : பிப் 15, 2026 12:09 AM

- நமது டில்லி நிருபர் -
அரசு மற்றும் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகள், தங்கள் சுயசரிதை மற்றும் பணிக்கால அனுபவங்களை எழுதி புத்தகமாக வெளியிடுவதற்கு, கடிவாளம் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு கிளப்பிய பிரச்னையால், லோக்சபா அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வழக்கு பதிவு கடந்த, 2019 முதல் 2022 வரை, நம் ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, தன் சுயசரிதை புத்தகத்தை, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ் டினி' என்ற பெயரில் எ ழுதி உள்ளார்.
அதில், கடந்த 2020ல் இந்தியா -- சீனா எல்லை பிரச்னையின் போது, மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து விளக்கமாக எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
'பென்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' பதிப்பகம் வெளியிட இருந்த இப்புத்தகத்திற்கு, ராணுவ அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இருப்பினும், அந்த புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறப்படும் சில வரிகளை எடுத்து பேசிய ராகுல், மத்திய அரசு குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை பார்லி.,யில் முன்வைத்தார்.
வெளியாகாத அந்த புத்தகத்தின், 'டிஜிட்டல்' வடிவ நகல்கள் அனைத்துமே, சமூக ஊடகங்களில், காங்கிரஸ் எம்.பி.,க்களால் பகிரப்பட்டன.
இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த புத்தகத்தை பதிப்பிக்க இருந்த, 'பென்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' பதிப்பகம் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய அரசு மற்றும் ராணுவத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி ஓய்வு பெறுவோர், தங்கள் பணிக்கால அனுபவங்களை புத்தகமாக வெளியிடுவதால் பல்வேறு சங்கடங்கள் எழுகின்றன.
எனவே, ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு, 'கூலிங் பீரியட்' என குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதுவரையில் அவர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமைதி காக்க வேண்டும்.
விரைவில் முடிவு அந்த வகையில், ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகே தங்கள் பணிக்கால அனுபவங்கள் குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடியும் என்ற நிலையை, உருவாக்க வேண்டும்.
இதை , தற்போதுள்ள நடைமுறைகளின் வழியிலேயே, ஒரு அரசாணை வெளியிட்டு அமல்படுத்திட முடியுமா அல்லது சட்ட ரீதியில் ஏதாவது சிக்கல் இருக்குமானால், பார்லிமென்டில் புதிய மசோதா கொண்டு வந்து, இதற்கு தீர்வு காண முடியுமா என்பது குறித்து ஆலோசித்து, விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

