‛ஆண் நண்பருடன் விரும்பி தானே சென்றீர்கள்': பலாத்கார வழக்கில் நீதிபதி கேள்வியால் சர்ச்சை
‛ஆண் நண்பருடன் விரும்பி தானே சென்றீர்கள்': பலாத்கார வழக்கில் நீதிபதி கேள்வியால் சர்ச்சை
ADDED : ஏப் 11, 2025 12:55 AM

அலகாபாத் : 'அதீத மது போதையில் ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்று, பிரச்னையை தானே வரவேற்றுள்ளார்' என, பாதிக்கப்பட்ட பெண் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
'இது பலாத்காரம் அல்ல; பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உடலுறவு என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது' என நீதிபதி கூறியுள்ளார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றில், உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கண்டனம்
'சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை துண்டிப்பது பலாத்காரமாகவோ, பலாத்கார முயற்சியாகவோ கருத முடியாது' என நீதிபதி கூறியிருந்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்தக் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பலாத்கார புகார் கூறியுள்ள பெண், டில்லியில் எம்.ஏ., படித்து வந்தார். கடந்தாண்டு செப்., 21ல், தன் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் குடித்துள்ளார்; அதிகாலையை தாண்டியும் குடித்துள்ளனர். அதீத போதையில் இருந்ததால், அந்தப் பெண், தன் ஆண் நண்பர் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.
ஆதாரங்கள்
ஆனால், ஆண் நண்பர், தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், வேறொரு உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களில் இது நிரூபிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள வாக்குமூலம் மற்றும் வழக்கின் தன்மையை ஆராயும்போது, இது பலாத்காரமாக தெரியவில்லை. பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவாகவே தெரிகிறது.
முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் பெண் என்பதால், எது சரி, எது தவறு என்பதை நிச்சயம் இந்தப் பெண் உணர்ந்திருப்பார். அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரச்னையை அவரே வரவேற்றுள்ளார். அதனால், அதற்கு அவர் தான் பொறுப்பாளி. இதை பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியுள்ளார். இதை பலாத்காரமாக கருத முடியாது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.