'உங்கள் வரவு நல்வரவு அல்ல' கவர்னருக்கு வரவேற்பு பேனர்! ஆரிப் முகமது கான் காட்டம்
'உங்கள் வரவு நல்வரவு அல்ல' கவர்னருக்கு வரவேற்பு பேனர்! ஆரிப் முகமது கான் காட்டம்
UPDATED : ஜன 11, 2024 07:34 AM
ADDED : ஜன 10, 2024 11:55 PM

மலப்புரம்: கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
கவர்னருக்கு எதிராக அடிக்கடி போர்க்கொடி துாக்குவதை இடதுசாரியினர் வழக்கமாக வைத்துள்ளனர்.
கருப்புக் கொடி
இந்நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பொன்னானியில், மறைந்த காங்., தலைவர் மோகன கிருஷ்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று வந்தார்.
அப்போது, வழி நெடுகிலும் கவர்னருக்கு எதிரான, 'பேனர்'களை வைத்தும், கருப்புக் கொடி காட்டியும் இடது சாரி கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பினர், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பேனர்களில், 'மிஸ்டர் வேந்தர் அவர்களே, உங்களுக்கு இங்கு வரவேற்பு இல்லை' என்றும், 'மிஸ்டர் வேந்தர் அவர்களே, ரத்தம் தோய்ந்த குற்றவாளிகள் என நீங்கள் சொன்னவர்கள் அதிகம் இருக்கும் பகுதி இது.
'எனவே கவனமாக இருங்கள்' என்றும் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இது குறித்துக் கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆளுங்கட்சியினரே சாலைகளில் இதுபோன்ற தடங்கல்களை ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது.
இந்த இடத்தை பற்றி அறியாத யாராவது, போராட்டம் நடத்துவது யார் என கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? இவர்கள் தான் அரசை நடத்துவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று பதில் சொல்வீர்களா?
போராட்டம்
அவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எனில், அவர்கள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துவதை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
இதற்கு பதில் என்னவென்றால், இடையூறுகள் செய்வது, அவமதிப்பது, போராட்டத்தில் ஈடுபடுவது, ஆளும் இடதுசாரி அரசின் நடத்தையாக உள்ளது.
இது அவர்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகவே மாறியுள்ளது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வளர்க்கப்பட்டு பயிற்சி பெற்றிருந்தால், உங்கள் இயல்பை மாற்றுவது மிகவும் கடினம்.
மாநிலத்தை ஆட்சி செய்யவே மக்கள் தங்களை தேர்வு செய்துள்ளனர் என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

