ADDED : நவ 14, 2025 07:45 PM

ராம்நகர்: ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்ற, வாலிபர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா சாதனங்களை கொலையாளிகள் துாக்கிச் சென்றனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா கொண்டாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த், 25. பிடதி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தார். இதனால் பிடதியில் அறை எடுத்துத் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, பிடதியில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். ஹோட்டல் முன் நிஷாந்த்தை மறித்த ஆறு பேர், அவரிடம் தகராறு செய்தனர்.
திடீரென காரில் இருந்து மரக்கட்டையை எடுத்து வந்து, நிஷாந்த்தை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹோட்டலுக்குள் சென்ற கொலையாளிகள், கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவாகும் சாதனங்களை துாக்கிச் சென்றனர்.
தகவல் அறிந்த எஸ்.பி., சீனிவாஸ் கவுடா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். விசாரணை நடக்கிறது.

