ADDED : டிச 13, 2024 05:09 AM
ஒயிட்பீல்டு: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத் மன்டல், 30, இவரது மனைவி வியூவோஹா, 26. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிழைப்பு தேடி, பெங்களூரு வந்த தம்பதி, ஒயிட் பீல்டின் சாவித்ரம்மா ஷெட்டில் வசித்தனர்.
வியூவோஹா, பள்ளியில் பணியாற்றினார். இதே பள்ளியில் மிதுன் மண்டல், 26, செக்யூரிட்டியாக பணியாற்றினார். இவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்தான். ஒயிட் பீல்டில் உள்ள தங்கும் விடுதியில் வசித்தார்.
வியூவோஹா திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும், அவரை மிதுன் மன்டல், ஒரு தலையாக காதலித்தார். தன்னை காதலிக்க வேண்டும் என, தொல்லை கொடுத்தார். கணவர், குழந்தையை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார்.
இவரது தொல்லையை தாங்க முடியாமல், அந்த பள்ளியில் வேலையை விட்ட வியூவோஹா, வேறு பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அப்போதும் தொல்லை தொடர்ந்தது.
பணி நிமித்தமாக வெளியே சென்ற வியூவோஹா, நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மிதுன் மன்டல், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். நல்லுாரள்ளி ஏரி அருகில் சென்று, அங்கிருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒயிட்பீல்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

