பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு
பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு
ADDED : ஏப் 01, 2025 05:45 AM

மைசூரு: கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும், பறவைகளும் கூட வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றன; இவை தண்ணீரை தேடி அலைந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்ட புறநகர் பகுதிகளில் தண்ணீர் இன்றி தவித்து வரும் பறவைகளின் தாகத்தை தீர்க்க, ஹூன்சூர் தாலுகாவை சேர்ந்த 'ஜனத்வானி' என்ற குழுவினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இளைஞர்கள் நிறைந்த இக்குழுவினர், கார் வாயிலாக தண்ணீர் கேன்களை எடுத்துச் செல்கின்றனர். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீரை நிரப்பி, மரங்களில் ஆங்காங்கே தொங்க விடுகின்றனர்.
இவற்றை தேடி வந்து பறவைகள் தண்ணீரை குடிக்கின்றன. இந்த குழுவினரை மைசூரை சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் தர்மேந்திர குமார் பாராட்டி உள்ளார். இந்த குழுவினரின் செயல்பாடுகள் சமூக வலைதளத்திலும் கவனம் பெற்றுள்ளன. இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தர்மேந்திர குமார் கூறியதாவது:
மக்கள் அனைவரும், தங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் ஒரு பாத்திரத்தில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்க வேண்டும். இதனால், பல பறவைகளின் தாகத்தை தீர்க்க முடியும்.
உங்கள் அன்றாட வேலையில், சிறிது நேரம் ஒதுக்கி பறவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஜனத்வானி குழுவின் நடவடிக்கை தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.