ரேபிஸ் தடுப்பூசி விபரம் அறிய 'ஜூவின் டிஜிட்டல்' தளம்
ரேபிஸ் தடுப்பூசி விபரம் அறிய 'ஜூவின் டிஜிட்டல்' தளம்
ADDED : ஏப் 01, 2025 12:48 AM

புதுடில்லி : நாடு முழுதும் ரேபிஸ் தடுப்பூசி, பாம்பு விஷ முறிவு மருந்துகளின் கையிருப்பு மற்றும் பயன்பாட்டை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும், 'ஜூவின்' என்ற, 'டிஜிட்டல்' தளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
நாய் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு உலகம் முழுதும் ஆண்டுக்கு, 60,000 பேர் உயிரிழக்கின்றனர். இதில், 36 சதவீத மரணங்கள் நம் நாட்டில் நிகழ்வதாக, ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல நம் நாட்டில் பாம்பு கடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு, 50,000 ஆக உள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் பாம்பு விஷ முறிவு மருந்துகள் கிடைப்பதையும், சரியான நேரத்தில் அது பயனாளிகளுக்கு செலுத்தப்படுவதையும் உறுதி செய்ய, டிஜிட்டல் தளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
'ஜூவின்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தை, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கி உள்ளது. அதற்கான தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு செய்துள்ளது.
டில்லி, மத்திய பிரதேசம், அசாம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இந்த டிஜிட்டல் தளம் சோதனை அடிப்படையில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, மார்ச் 28ல் டில்லியில் ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராமப்புறங்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் பாம்பு விஷ முறிவு மருந்துகள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை கண்டறிய இந்த டிஜிட்டல் தளம் உதவியாக இருக்கும்.
மேலும் எங்கெங்கு மருந்துகள் கையிருப்பு உள்ளன என்பதை உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிந்துகொள்ள முடியும்.

