நவ 25, 2009 12:00 AM
நவ 25, 2009 12:00 AM
இந்தியாவில் ஐ.ஐ.டி.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மற்றும் ஐ.ஐ.ஐ.,டி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி) ஆகிய நிறுவனங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் தற்பொழுது ஏழு ஐ.ஐ.டி.,கள் இயங்கி வருகின்றன. மேலும் சில ஐ.ஐ.டி.,களுக்கு மத்திய மனிதவள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதே போல தற்பொழுது நான்கு ஐ.ஐ.ஐ.,டி.,கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 20 ஐ.ஐ.ஐ.,டி.,களை தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில் நிறுவ திட்டக்கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக தொடங்கவுள்ள 20 ஐ.ஐ.ஐ.டி.,கள் கீழ்கண்ட இடங்களில் அமையலாம் எனத் தெரிகிறது. டில்லி, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஜம்மு,
சண்டிகார், டேராடூன், லக்னோ, பாட்னா, ஷில்லாங், கோல்கட்டா, ஆமதாபாத், இந்தூர், நாக்பூர், புவனேஷவர், புனே, விசாகபட்டினம், மைசூரு, மங்களூரு மற்றும் கோயம்புத்தூர். இந்த இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
புதிதாக தொடங்கவிருக்கும் ஐ.ஐ.ஐ.டி.,களுக்கான செலவை மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் ஐ.ஐ.ஐ.டி.,கள் இந்தியாவின் ஐ.டி., தொழில் துறை வளர்ச்சியில பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.ஐ.டி., இளநிலை, முதுநிலை படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகளையும் நடத்துகிறது. ஐ.ஐ.ஐ.டி,களை அமைக்கும் திட்டம் பற்றிய முழு அறிக்கையை நாஸ்காம் தயார் செய்துள்ளது.
நாஸ்காம் அறிக்கை: இதன்படி ஐ.ஐ.ஐ.டி., அமைப்பதற்கு மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க வேண்டும். மேலும் ஒரு ஐ.ஐ.ஐ.டி., அமைப்பதற்கான செலவு 30 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் மாநில அரசின் பங்களிப்பு 14.9 கோடி ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதே போல தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 15.1 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் ஐ.ஐ.ஐ.டி.,யை நிர்வகிக்க மாநில அரசு 100 கோடி ரூபாய் கடனாக வழங்க வேண்டும்.
இந்த தொகை 10 வருட காலத்திற்குள் திரும்பச் செலுத்தும் விதமாக இருக்க வேண்டும். ஐ.ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற உள்ள போராசியர்களுக்கான சம்பளம் அவர்களுடைய திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் இவ்வாறு நாஸ்காம் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பற்றி ஆலோசிப்பதற்காக மீண்டும் திட்டக்கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
