ஜூலை 11, 2025 12:00 AM
ஜூலை 11, 2025 12:00 AM

கேள்விகள் அடங்கிய தேர்வு தாள்களை அளித்து, அவற்றிற்கு பதில் அளிக்கவே நமது மாணவர்களை தயார்படுத்துகிறோம். கேட்கப்படும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் பயிற்சியை நம் மாணவர்கள் நன்கு பெற்றுள்ளனர். ஆனால், சவால்களை தேடி அறிந்து, அவற்றிற்கான தீர்வு காணும் திறனை வளர்த்துக்கொள்ளும் பயிற்சியை அவர்களுக்கு அளிக்க மறந்துவிட்டோம்.
ஸ்டான்போர்டு, ஹார்வர்டு போன்ற உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை, நம் நாட்டு கல்வி நிறுவனங்களால் செய்ய முடியாததற்கான காரணம் இந்த இடைவெளி தான். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுதல் ஆகியவற்றை இந்திய கல்வி நிறுவனங்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
பிரச்னைகளுக்கு தீர்வு காண முதலில் எது பிரச்னை என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது மாணவர்கள் பல்வேறு சமூக பிரச்னைகளை அறிந்துகொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவற்றிற்கு சரியான தீர்வு காண ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். பலருக்கும் நன்மை பயக்கும் தீர்வுவாக அது அமையும் வகையில் இருத்தல் வேண்டும்.
உலகளவில் விமானங்களை வெகு சில நிறுவனங்களே தயாரிப்பதும், அரபு நாடுகளில் பூமிக்குள் 10 ஆயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள பெட்ரோலை எடுக்க சில நிறுவனங்களே ஈடுபடுவதும் அவர்களது தனித்துவத்தை காட்டுகின்றன. சில மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண மிக சிலரால் மட்டுமே முடிகிறது.
பிரச்னைகளின் தன்மையை ஆழ்ந்து உணர்ந்தால் மட்டுமே அவற்றிற்கு தீர்வுகாண முடியும். அதற்கு, பிரச்சனைகளை காதலிக்க வேண்டும். பிரத்யேக கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி, பிறர் கண்டறிந்த பிரச்னைகளுக்கு மாற்று தீர்வு காண்பதில் எந்த தவறும் இல்லை. பிரச்னைகளை எளிதாக்குவதில் தான் நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர, பிரச்னைகளை மேலும் கடினமானதாக மாற்றுவதில் அல்ல. மழைப்பிரதேசங்களில் நிலையான தடையற்ற மின்சாரம் வழங்குவதில் இடர்பாடு, பெரும் நகரங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் என பல்வேறு சவால்கள் நம் முன்னே இருக்கின்றன.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிங்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், மைனிங் என பல்துறைகள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வதும், பல்துறை சார்ந்த நிபுணர்களுடன் இணைந்து செயல்படும் திறனை பெறுவதும் இன்று அவசியமாகிறது. 'தியரட்டிக்கல்' அறிவு மட்டுமே போதாது. செயல்முறையிலான அனுபவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கருத்தியல் தெளிவு மிக அவசியம்.
படிப்பை கடந்து, திறன்மிக்கவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்குமே வேலை கிடைப்பதில்லை. அதேநேரம், ஐ.டி.ஐ., டிப்ளமா படித்தவர்களுக்கு கடும் தேவை உள்ளது. பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்களில் அவர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இன்ஜினியரிங் படிப்பதில் எந்த தவறும் இல்லை; திறனை வளர்த்துக்கொண்டவர்களாக, சவால்களுக்கு தீர்வு காண்பவர்களாக உயர்வதே முக்கியம். அனைவருக்கும் இன்ஜினியரிங் படிப்பு சரியாக இருக்குமே என்பதே பிரதான கேள்வி. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் மட்டுமல்ல; எலக்ட்ரீசியன்களும் நாட்டிற்கு அவசியம்.
- லக்ஸ் ராமலிங்கம், சி.ஒ.ஒ., குவிஸ்ட் குளோபல்.