ஜூலை 09, 2025 12:00 AM
ஜூலை 09, 2025 12:00 AM

டேட்டா சயின்ஸ் பொறியியல் என்பது இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. தரவுகளை சேகரித்து, பகுத்து, அதிலிருந்து பயனுள்ள முடிவுகளை எடுக்கும் திறனை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் பழக்கங்கள், விற்பனை போக்குகள், சந்தை மாற்றங்கள் போன்றவற்றை புரிந்துகொள்ள டேட்டா சயின்ஸ் பயன்படுத்துகின்றன.
படிப்பு
இந்தத் துறையை இளநிலை மற்றும் முதுநிலை படிப்பாக பயிலலாம். இளநிலை படிப்பு பி.டெக்., / பி.இ.,- தரவு அறிவியல் என வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகு, முதுநிலை படிப்பான எம்.டெக்., / எம்.இ., அல்லது எம்.எஸ்சி., -தரவு அறிவியல் படிப்பில் சேர முடியும்.
பாடத்திட்டம்
பாடத்திட்டங்களில் புள்ளியியல், பைதான், ஆர் புரோகிராமிங், புராபபலிட்டி, டேட்டா மைனிங், மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, ஏஐ, டீப் லேர்னிங், டேட்டா விஷுவலைசேஷன், டேட்டா செக்யூரிட்டி, என்.எல்.பி., போன்றவை அடங்கும்.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கல்லூரிகளிலும், பல்வேறு தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்பு
படிப்பை முடித்த பின் தரவு விஞ்ஞானி, தரவு ஆய்வாளர், இயந்திர கற்றல் பொறியாளர், தரவு பொறியாளர், வணிக ஆய்வாளர் போன்ற பணியிடங்களை பெற முடியும். மேலும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. அனுபவம் மற்றும் திறன்களைப் பொறுத்து, ஊதியம் வழங்கப்படுகிறது.
எதிர்கால வளர்ச்சி
டேட்டா சயின்ஸ் துறை, செயற்கை நுண்ணறிவு, இணையப் பொருட்கள் -ஐ.ஓ.டி.,, ரோபாட்டிக்ஸ், ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பல முன்னேறிய துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இத்துறையின் எதிர்கால வளர்ச்சி அபாரமாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இதுவும் கருதப்படுகிறது.
கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல் மற்றும் தரவுகள் மீது ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தத் துறையை தேர்வு செய்தால், தொழில்நுட்ப உலகில் தங்களை சிறப்பாக நிலைநாட்ட முடியும்.