மே 21, 2025 12:00 AM
மே 21, 2025 12:00 AM

தொழில்நுட்பம் இன்று அனைத்து துறைகளிலும் ஏராளமான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. முன்பு, ஒவ்வொரு துறையிலும் கண்டறியப்பட்ட தொழில்நுட்பங்கள் அந்தந்த துறை சார்ந்த பயன்பாட்டிற்கு மட்டுமே உதவின. ஆனால், சமீப காலங்களில் கண்டறியப்படும் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளை ஒன்றிணைப்பவைகளாகவும், பல்துறைகளில் பயன்படுத்தக் கூடிய வல்லமை பெற்றவைகளாகவும் உள்ளன.
உதாரணமாக, 'ஏ.ஐ.,' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. 'ஏ.ஐ.,' நிறைய சாதகமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் அதேதருணம், சில இடங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. 'ஓபன் ஏ.ஐ.,' வரவிற்கு பிறகு, வழக்கமாக செய்யப்படும் வேலைகள் தானியங்கி முறைக்கு மாற்றப்படுகின்றன. 'நேரோ ஏ.ஐ.,' என்பது வழங்கப்படும் பணிகளை மட்டும் மேற்கொள்கிறது; 'பிராட் ஏ.ஐ.,' என்பது ஒருவர் மனதில் நினைக்கும் எண்ணங்களையும் புரிந்து, அதற்கு ஏற்ப செயல்படுகிறது.
உயர்கல்வி மதிப்பீட்டு முறையில் முன்பு புத்தகங்களை பார்க்கக்கூடாது; பிறரிடம் பேசக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பார்க்கலாம், சக மாணவர்களிடம் கலந்துரையாடலாம். அவற்றின் வாயிலாக புதியவற்றை கற்று, பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண மாணவர்கள் ஊக்கமளிக்கப்படுகின்றனர்.
'செமஸ்டர்' முடிவில் எழுத்துத் தேர்வு வாயிலாக மட்டுமே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கல்லூரியில் சேர்க்கை பெற்ற முதல் வாரம் முதலே, ஒவ்வொரு மாணவரும் செய்யும் 'புராஜெக்ட்'டில் இருந்து மதிப்பீட்டு முறை துவங்குகிறது. இத்தகைய நடைமுறையே 'ஹேக்கத்தான்' என்ற பல்வேறு போட்டிகளிலும் பின்பற்றப்படுகின்றன. இத்தகைய மதிப்பீட்டு முறை அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஆய்வகமே இன்று விர்ச்சுவலாக வந்துவிட்ட நிலையில், ஒரு மனித இதயத்தின் செயல்பாடுகளை மெய்நிகர் முறையில் பார்க்க முடியும். 'ஆக்குமெண்டடு ரியாலிட்டு' மற்றும் 'விர்ச்சுவல் ரியாலிட்டி' வாயிலாக, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு இணையான செயல்முறை அனுபவத்தை பெற முடியும். இத்தருணத்தில், கற்றல் செயல்பாட்டை மறுவரையறை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆசிரியரிடம் இருந்து கற்கலாம்; ஆசிரியரும் மாணவர்களிடம் இருந்து கற்கலாம். ஆசிரியர் என்பவர் ஒரு 'பெசிலிடேட்டர்' போல செயல்படுவார். இத்தகைய கல்வி முறையே இனி பரவலாக பின்பற்றப்படும்.
- டாக்டர் கே.செந்தில் கணேஷ், நிர்வாக மேலாளர், ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.