நவ 07, 2026 10:57 AM
நவ 07, 2026 10:57 AM

சைபர் பாதுகாப்புத் துறையில் மாபெரும் மைல்கல்லாக, அதிநவீன 'ஜி.பி.டி., - 6 சைபர்' என்ற பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாடலை, ஓபன் ஏ.ஐ., நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
களமிறங்கிய உடனேயே, பிரபல பயர்பாக்ஸ் பிரவுசரில் 81 தீவிரப் பாதிப்புகளையும், லினக்ஸ் இயங்குதளத்தில் 948 பாதுகாப்பு குறைபாடுகளையும் துல்லியமாகக் கண்டறிந்து இந்த புதிய ஏ.ஐ., மாடல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முன்னணி மென்பொருட்கள் மற்றும் இயங்குதளங்களில் மறைந்திருக்கும் ஆபத்தான பிழைகள் மற்றும் சங்கேதக் குறியீடுகளை, ஹேக்கர்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கு முன்பே கண்டறிந்து சரிசெய்யும் நோக்கில் ஓபன் ஏ.ஐ., இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
ஆய்வில் அம்பலமான உண்மைகள்
ஓபன் ஏ.ஐ., நடத்திய விரிவான சோதனையின் போது, 'ஜி.பி.டி., - 6 சைபர்' மாடல் ஆட்டோமேட்டட் முறையில் மென்பொருட்களின் மூலக் குறியீடுகளை ஆய்வு செய்தது. இதில், மோசில்லா பயர்பாக்ஸ் இணைய உலாவியில், ஹேக்கர்கள் ஊடுருவக்கூடிய வகையிலான 81 மிகத் தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
உலகெங்கிலும் லட்சக்கணக்கான சர்வர்கள் மற்றும் சாதனங்களை இயக்கும் லினக்ஸ் கட்டமைப்பு மற்றும் கர்னலில் 948 தீவிரப் பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சைபர் வல்லுநர்கள் வரவேற்பு
வழக்கமான சோதனைக் கருவிகளால் பல மாதங்களாக மனித வல்லுநர்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத சிக்கலான பிழைகளை, இந்த ஏ.ஐ., மாடல் மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாகக் கண்டறிந்துள்ளது. கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்த முழு விவரங்களும் மோசில்லா மற்றும் லினக்ஸ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டு, உடனடி பாதுகாப்பு பேட்ச்கள் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஹேக்கர்கள் ஏ.ஐ., நுட்பங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்துள்ள சூழலில், உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் தற்காப்புக் கேடயமாக இந்த 'ஜி.பி.டி., - 6 சைபர்' உருவெடுத்துள்ளதாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
