நவ 06, 2026 02:04 PM
நவ 06, 2026 02:04 PM

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான அளவில் வழங்குவது, அந்த மருந்துகளின் பயன்பாடு, பக்கவிளைவுகள் குறித்து வழிகாட்டுவது, 'பார்மசிஸ்ட்'ன் பணி.
பார்மசி துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் முதலில் 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது கணிதப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும், இதரப் பிரிவினர் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, சேர்க்கை நடைமுறைகளைப் பொறுத்தவரை மாநில அளவில் நடைபெறும் கலந்தாய்வு, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
படிப்புகள்
மாணவர்கள் தங்கள் விருப்பம் மற்றும் கால அளவிற்கு ஏற்ப பலதரப்பட்ட மருந்தியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். விரைவாகப் பணிக்குச் செல்ல விரும்புபவர்கள், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்பை தேர்வு செய்யலாம். முழுமையான பட்டப்படிப்பிற்கு, 4 ஆண்டு இளங்கலை மருந்தியல் படிப்பைத் தேர்வு செய்யலாம். மருந்து தயாரிப்பு, ஆராய்ச்சி, தரம் பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பி.பார்ம் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கான நேரடி மருத்துவப் பராமரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், 6 ஆண்டுகள் கொண்ட 'டாக்டர் ஆப் பார்மசி' படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். பி.பார்ம் முடித்தவர்கள் எம்.பார்ம் அல்லது பார்மா நிர்வாக மேலாண்மை போன்ற உயர்கல்வியிலும் சேரலாம்.
செய்முறைப் பயிற்சி
பார்மசி படிப்பின் முக்கிய பகுதியாக விளங்குவது செய்முறைப் பயிற்சி. கல்லூரிகளில் 'தியரி' அறிவைப் பெறுவதுடன் நின்றுவிடாமல், மருத்துவமனைகள் அல்லது முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்ட கால அளவிலான தொழிற்பயிற்சியை மாணவர்கள் முழுமையாக முடிக்க வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டுகளைச் சரியாக வாசித்தல், மருந்துகளைப் பாதுகாக்கும் முறைகள், மருந்துகளின் இரசாயனக் கலவை மற்றும் நோயாளிகளிடம் உரையாடும் விதம் ஆகியவற்றை இந்த நேரடிப் பயிற்சியின் மூலமே மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
படிப்பையும் பயிற்சிகளையும் முடித்த பிறகு, சட்டப்பூர்வமாக பார்மசிஸ்டாகப் பணியாற்ற மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்திய பார்மசி கவுன்சில் அங்கீகரித்த கல்லூரிகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம் வழங்கப்படும்.
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்ற பின்னரே ஒருவரால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலோ அல்லது சொந்த மருந்தகம் அமைத்தோ பணிபுரிய முடியும்.
வேலைவாய்ப்பு
மேலும், உரிமம் பெற்ற பார்மசிஸ்டுகளுக்கு பல இடங்களில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்றலாம். மருந்து உற்பத்தி நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டாளர், உற்பத்தி மேற்பார்வையாளர், மருந்து ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். மேலும், சுயதொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்கள், சொந்தமாக மருந்து விற்பனையகம் தொடங்கலாம்.
