செப் 22, 2015 12:00 AM
செப் 22, 2015 12:00 AM
பேஷன் தொழில்துறை என்பது இன்றைய நிலையில், உலகின் பிரதான தொழில்துறைகளுள் ஒன்றாக உருவெடுத்து வருகிறது!
பத்தாண்டுகளுக்கு முன், ஒரு மாணவர், தன் பெற்றோரிடம் பள்ளிப் படிப்பிற்கு பிறகு பேஷன் துறை படிப்பை மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினால், அவர்களுக்கு கோபம் தான் வரும். தங்களின் பிள்ளை ஏதோவொரு தெரியாத, வேலை வாய்ப்பே இல்லாத, பிரயோஜனமற்ற துறையை தேர்வுசெய்து விட்டதாய் அவர்கள் பதறுவார்கள்.
ஆனால், இன்று நிலைமையே வேறு. இந்தியாவில் அத்துறை நன்கு வளர்ச்சியடைந்திருப்பதோடு, அனைவரிடமும் விழிப்புணர்வும் பெருகியுள்ளது.
‘தியரி’யும் முக்கியம்
பேஷன் துறையின் பிரதான அம்சம் படைப்புத் திறனாக இருந்தாலும், இத்துறை படிப்பு, முற்றிலும் அது சார்ந்தது மட்டுமே அல்ல. தியரி மற்றும் பிராக்டிகல் ஆகிய இரண்டு அம்சங்களும் சேர்ந்ததுதான் இப்படிப்பு.
பட்டம் மட்டும் போதுமா?
பேஷன் துறையில் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றுவிட்டாலே, அவர் அத்துறையில் சாதிப்பதற்கான அனைத்து தகுதிகள் மற்றும் திறமைகளைப் பெற்றுவிட்டார் என்று அர்த்தமல்ல. அதேபோன்று, வெளிநாட்டிற்கு சென்று பேஷன் படிப்பு முடித்துவரும் ஒரு நபரும், அத்தொழிலுக்கான அனைத்து அம்சங்களிலும் தேர்ந்த நபராக இருப்பார் என்பதை உறுதிசெய்ய முடியாது.
‘கற்றுக் கொண்டே செயல்படுதல்’ என்பதுதான் இத்துறையில் அதிக அனுபவத்தைப் பெற உதவும் என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்து. தியரி அறிவும், பிராக்டிகல் அறிவும் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தவை. எனவே, ஒரு பேஷன் துறை மாணவர், இந்த இரண்டையும் பெறாமல் வெற்றி பெறுவது எளிதல்ல.
கல்வி நிறுவனங்கள்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டிசைன் (என்.ஐ.எப்.டி.,)
* நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் (என்.ஐ.டி.,)
* இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டிசைன், உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்படிப்புக்கு பிரபலமானவை.
பணி வாய்ப்புகள்
சமீபகாலமாக மக்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாலும், துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாலும், வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனினும், இத்துறையில் ஒருவருக்கு தனித்தன்மை அவசியம். அப்போதுதான் தனக்கான சிறந்த பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் அல்லது தொழில்முனைவோராக, சுயமாக தனது திறமையை வெளிப்படுத்தும்பட்சத்திலும் இத்துறையில் சாதனையாளராக வளம் வர முடியும்!

