/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இந்திய கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்கள்!
/
இந்திய கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்கள்!
செப் 28, 2015 12:00 AM
செப் 28, 2015 12:00 AM
வகுப்பில் பேசக்கூடாது; தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாது; ஆசிரியர்கள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் போன்ற பல விதிமுறைகள் கொண்ட வரையறுக்கப்பட்ட கல்வி முறையை, நாம் இந்தியாவில் பின்பற்றுகிறோம்!
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சுதந்திரமான கல்வி முறை பின்பற்றப்படுகிறது. இதில் எது சரி, எது தவறு என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இரண்டிலும் சாதக, பாதகங்கள் இருக்கின்றன. தமிழக பள்ளிகளில் மட்டும் இன்று ஒரு கோடிக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவ சமுதாயத்தை ஒருங்கே உயர்கல்வியை நோக்கி அழைத்து செல்ல சில விதிமுறைகள் உதவுவதை சாதமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
குறை யார் மீது?
பிளஸ் 2 வரை இந்த நடைமுறையில் படித்த மாணவர்களை கல்லூரியில் சேர்ந்த பிறகு அதைவிட கடினமான ஒரு பாடத்தை படிக்க சொல்கிறோம். அங்கேயும் பெரும்பாலான மாணவர்களை பேச விடுவதில்லை. கல்லூரி முடித்து பிறகு மாணவருக்கு பேசவே தெரியவில்லை என்று குறை கூறுகிறோம். இவ்வாறு பள்ளி முதல் கல்லூரி வரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ‘பேசாதே’ என்று சொல்லியே வளர்த்து விட்டு, வேலைக்கு செல்லும் போது மட்டும் ‘பேசுவதேயில்லை’ என்று நாமே குறைகூறுகிறோம்! இது பாதகம்.
அமெரிக்காவில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே மாணவர்கள் தாங்கள் விரும்புவதை செய்ய சுதந்திரம் இருக்கிறது. அவர்களால், சுதந்திரமாக கேள்விகளை கேட்க முடியும். உண்மையாக தனது மனதில் தோன்றும் விசயத்தை தைரியமாக ஆசிரியரிடம் வாதாட முடிகிறது. இந்த காரணங்களால் தான் அவர்களால் சாதிக்க முடிகிறது என்று அர்த்தம் இல்லை. ஆனால், இவை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை தருகிறது. அதேபோல் இந்த சுதந்திரத்தால் சில பாதங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
தேர்வு முறை
இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சிறந்த முறையில் தேர்வு எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும். இரண்டு நாடுகளிலும் பாடத்திட்டம் கிட்டத்தட்ட ஒரு போலத்தான் உள்ளது. தேர்வு முறையில் தான் மிகப்பெரிய வேறுபாடு. அமெரிக்காவில் திறந்த புத்தகத்தை பார்த்தும் தேர்வு எழுதலாம். ஆனால், பாடம் நன்கு புரிந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். இந்தியாவில் தேர்ச்சி பெறுவதற்கு அனைத்து பாடங்களையும் நன்கு புரிந்து படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில பாடங்கள் புரியாமல் கூட மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட முடிகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவருக்கும் கல்வி அறிவு புகட்டுவதை சாத்தியமாக்க வேண்டுமானால், சில விதிமுறைகளை பின்பற்றித்தான ஆக வேண்டியுள்ளது. எனினும், இதில் சில மாற்றத்தை புகுத்தலாம். ‘பிராக்டிகல்’ கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். நன்கு புரிந்து படித்தால், தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலையை கொண்டுவர வேண்டும். அதற்கு, தேர்ச்சி பெறுவதற்கான அளவுகோலை சற்று தளர்த்தலாம். பட்டப்படிப்பில், ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டு வரை துறை சார்ந்த நேரடி பயிற்சியை பெறும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றலாம். இதன்மூலாம், அனைவரையும் சிறந்த மாணவர்களாக மாற்ற முடியும்!
-சரவணன் பெரியசாமி, தலைவர், பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.

