நவ 01, 2026 07:15 PM
நவ 01, 2026 07:15 PM

வெறும் அழகு நிலையம் சார்ந்த பணிகளுடன் நின்றுவிடாமல், அறிவியல் பூர்வமான சருமப் பராமரிப்பு, கூந்தல் சிகிச்சை மற்றும் மருத்துவ அழகியல் நுட்பங்கள் வரை ஆராயும் துறை தான் காஸ்மட்டாலஜி.
காஸ்மட்டாலஜிஸ்ட் என்பவர் வாடிக்கையாளர்களின் சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார். முகப்பரு நீக்கம், ஃபேசியல் போன்ற சருமச் சிகிச்சைகள், முடி வெட்டுதல், நிறமிடுதல், கெரட்டின் மற்றும் உச்சந்தலை பராமரிப்பு போன்ற கூந்தல் சிகிச்சைகளை இவர்கள் வழங்குகின்றனர்.
அத்துடன் திருமணங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனை கலைஞராகவும், வாடிக்கையாளரின் தோற்றத்திற்கு ஏற்ற அழகுப் பராமரிப்புப் பொருட்களைப் பரிந்துரைக்கும் ஆலோசகராகவும் செயல்படுகின்றனர்.
படிப்பு
காஸ்மட்டாலஜி துறையில் நுழைவதற்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. பொதுவான அழகுக்கலை படிப்புகளுக்கு கலை அல்லது வணிகப் பிரிவு பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றாலும், உயர்நிலை வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களைப் படித்திருப்பது சரும அறிவியல் மற்றும் சிகிச்சை முறைகளை எளிதில் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.
மருத்துவ அழகியல் நிபுணராகப் பணியாற்ற விரும்புபவர்கள் மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இத்துறையில் சான்றிதழ் படிப்பு முதல் முதுகலை டிப்ளமோ வரை பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அடிப்படை அறிவைப் பெற விரும்புவோர் சில மாதங்கள் கொண்ட குறுகிய கால சான்றிதழ் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
விரிவான தொழில்முறை அறிவைப் பெற விரும்பும் மாணவர்கள் 12ஆம் வகுப்பிற்குப் பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கொண்ட காஸ்மட்டாலஜி டிப்ளமோ படிப்புகளில் சேரலாம். இதைத் தவிர, மருத்துவப் பின்புலம் கொண்டவர்களுக்கு கிளினிக்கல் காஸ்மட்டாலஜி, அழகியல் மருத்துவம் சார்ந்த முதுகலை டிப்ளமோ படிப்புகள் கிடைக்கின்றன.
வாய்ப்பு
காஸ்மட்டாலஜி முற்றிலும் ஒரு செய்முறைத் தொழில். கருவிகளை முறையாகப் பயன்படுத்துதல், நவீன அழகியல் தொழில்நுட்பங்களைக் கையாளுதல் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற செயல்முறைத் திறன்கள் அவசியம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுமையுடன் கேட்டறியும் தகவல் தொடர்புத் திறன் மற்றும் படைப்பாற்றல் மிகவும் முக்கியம். நீங்கள் செய்யும் சிறந்த பணிகளை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிர்வதும், ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதும் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்க உதவும்.
படிப்பை முடித்த பிறகு புகழ்பெற்ற அழகு நிலையங்கள், நல்வாழ்வு மையங்கள், தோல் சிகிச்சை மையங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறலாம். மேலும், திரைப்படத் துறை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறைகளிலும் அழகியல் நிபுணர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் உண்டு.
