தொழில்துறை தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்த சிறப்பு திறன் மையம்
தொழில்துறை தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்த சிறப்பு திறன் மையம்
நவ 03, 2026 11:21 AM
நவ 03, 2026 11:21 AM

தொழில்துறையின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பொறியியல் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பணி திறன் மேம்பாட்டு மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
மின்சார வாகனத் தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்த வாகன வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சி அளிப்பதுடன், தொழில் நிறுவனங்களின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆராய்ச்சிப் பணிகளிலும் இந்த மையம் கவனம் செலுத்துகிறது.
மாணவர்களின் கல்வி கற்றலை வகுப்பறையுடன் நிறுத்திவிடாமல், தொழில்துறையின் நடைமுறைச் சூழலுடன் இணைப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம். இறுதியாண்டு இளநிலை மாணவர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதேபோல், முதுநிலை மற்றும் ஆய்வு படிப்பு மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளுக்கான திட்டங்களைத் தொழில் நிறுவனங்களின் தேவைகளுடன் இணைத்து மேற்கொள்ளவும் ஆய்வக வசதிகள் திறந்துவிடப்படுகின்றன.
குறிப்பாக, தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் கிடைக்காத தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வேறு துறைகளிலும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் பணியாளர்களுக்கு இந்த மையம் உதவுகிறது. தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் திட்டங்களை உருவாக்குவதால், மாணவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரஸ்பரப் பயன் கிடைக்கிறது.
மென்பொருள் சார்ந்த வாகனங்கள்
இந்த மையம் தொடங்கப்பட்டபோது, இரண்டு முக்கியத் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை மென்பொருள் சார்ந்த வாகனங்கள் மற்றும் மின்சார வாகனத் தொழில்நுட்பம்.
தற்போதைய நவீன வாகனங்களில் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த ஏராளமான மின்னணுக் கட்டுப்பாட்டு அலகுகள் (Electronic Control Units) பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாகனத்தில் அதிகபட்சம் 150 ECUகள் வரை இடம்பெற வாய்ப்புள்ளது. இத்தகைய தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பதிலாக, மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் மூலம் வாகனத்தின் பல்வேறு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமே மென்பொருள் சார்ந்த வாகன வடிவமைப்பாகும்.
மொபைல் போன்களில் புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, மென்பொருளைப் புதுப்பித்து புதிய வசதிகளைப் பெறுவதைப் போல, வாகனங்களிலும் மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் புதிய அம்சங்களைச் சேர்க்கவும், ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.
இதற்காக வாகனத்தின் செயல்பாடுகள் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றை மையக் கணினியுடன் இணைக்கும் 'ஸோனல் ஆர்கிடெக்சர்' (Zonal Architecture) முறை பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச வாகனத் தொழில்துறையில் இந்தத் தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப பயிற்சித் திட்டங்களையும் இந்த மையம் மேம்படுத்தி வருகிறது.
மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் விரிவான பயிற்சி
இரண்டாவது முக்கியப் பிரிவான இ-மொபிலிட்டி மையம், மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
வாகனங்களுக்கான டிராக்ஷன் மோட்டார் வடிவமைப்பு, பவர் எலக்ட்ரானிக்ஸ், வாகனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு, மின்சார ஆற்றல் மேலாண்மை, மோட்டார் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், கணித மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப வடிவமைப்பை மேற்கொள்ளும் 'மாடல் பேஸ்டு டிசைன்' (Model Based Design), மென்பொருள் வழி உருவகப்படுத்துதல் (Software-in-the-Loop), வன்பொருள் வழி உருவகப்படுத்துதல் (Hardware-in-the-Loop) போன்ற சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பங்களும் கற்பிக்கப்படுகின்றன.
வாகனத்தில் பொருத்துவதற்கு முன்பே, வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் நடைமுறையில் எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனவா என்பதைச் சோதித்தறிவதே இப்பயிற்சிகளின் நோக்கமாகும். ஸ்டியர்-பை-வயர் தொழில்நுட்பம், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பொருள் கண்டறிதல் உள்ளிட்ட அம்சங்களிலும் மாணவர்கள் பணியாற்றுகின்றனர்.
தானியங்கி வாகனங்களுக்கான வாய்ப்புகள்
இந்தியாவில் முழுமையான தானியங்கி வாகனங்களைப் பொதுச் சாலைகளில் பரவலாகப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட துறைகளில் குறைந்த வேகத்தில் இயங்கும் தானியங்கி வாகனங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் இருப்பதாக மையத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரக் கண்காணிப்பு, கிடங்குகளில் பொருட்களைக் கொண்டு செல்லுதல், விமான நிலையங்களில் பயணிகளை விமானம் வரை அழைத்துச் செல்லும் பேருந்துகள் போன்றவற்றில் தானியங்கி வாகனங்களைப் பயன்படுத்த முடியும். எனினும், இத்தகைய பயன்பாடுகளுக்கும் அரசின் அனுமதி அவசியமாகும்.
அதேநேரத்தில், பொதுச் சாலைகளில் அதிக வேகத்தில் பிற வாகனங்களுடன் இணைந்து இயங்குதல், முந்திச் செல்லுதல் உள்ளிட்ட சிக்கலான தானியங்கி ஓட்டுநர் செயல்பாடுகளுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பாடு
தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் பிட்ஸ் பிலானி இணைந்து செயல்பட்டு வருகிறது. சைபர் பாதுகாப்புத் துறையில் Bosch நிறுவனத்துடனும், Microchip நிறுவனத்துடனும் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், ஒப்பந்தங்களைச் செய்வதைவிட அவற்றின் அடிப்படையில் நடைமுறைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நிறுவனங்கள் தங்களது உண்மையான தொழில்நுட்பப் பிரச்னைகளை மையத்திடம் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றின் முழுமையான விவரங்களை வெளியிட முடியாத சூழலிலும், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் பணிகளில் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபடுகின்றனர்.
பணியாளர்களுக்காக வார இறுதி பயிற்சிகள்
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களுக்காகக் குறுகிய காலச் சான்றிதழ் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பணியில் இருக்கும் மூத்த வல்லுநர்களுக்கு நீண்டகாலப் பயிற்சிகளில் பங்கேற்பது சிரமமாக இருப்பதால், ஆறு முதல் எட்டு வார இறுதிகளில், சுமார் நான்கு மாத கால இடைவெளியில் முடிக்கக்கூடிய மைக்ரோ கிரெடென்ஷியல் பயிற்சிகளை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, குறிப்பிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் சிறப்புப் பயிற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சிகளின் தனிச்சிறப்பு, கோட்பாட்டுக் கல்வியுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்தி நேரடியாகச் செயல்முறைப் பயிற்சி அளிப்பதாகும். காலை நேரத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பிற்பகலில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆய்வகங்களில் தொழில்நுட்பச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிறுவனத்தின் பணியாளர் பயிற்சித் திட்டங்களில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஒருங்கிணைத்து அனுப்பும் முறையும், தனிநபர்கள் நேரடியாகப் பங்கேற்கும் முறையும் நடைமுறையில் உள்ளன.
அரசு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாடு
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களிலும் இந்த மையம் பங்கேற்று வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களைத் தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்குத் தயார்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள் தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்களிலும் பங்கேற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள்
தொழில்நுட்ப உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பயிற்சித் திட்டங்களின் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள், தொழில் நிறுவனங்களின் கருத்துகள், மாணவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சிகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் பாடத்திட்டங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளை அதிகரிப்பதே மையத்தின் முக்கிய இலக்காக உள்ளது. மேலும், தனித்தனி ஆய்வகங்களில் வழங்கப்படும் பயிற்சிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியல் படிப்புகளின் பாடத்திட்டத்திலேயே ஒருங்கிணைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
மாணவர்களுக்கு அறிவுரை
மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்றுக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்களின் அறிவும், இன்று படிக்கும் மாணவர்களின் அறிவும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிதும் மாறுபட்டுள்ளன. எனவே, ஒரு பட்டம் பெற்றுவிட்டால் கற்றல் முடிந்துவிடாது. புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து அறிந்துகொள்வதும், தங்களது திறன்களை அவ்வப்போது மேம்படுத்திக்கொள்வதும் அவசியம்.
பட்டப்படிப்புடன் கற்றல் முடிவதில்லை; தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்பவர்களுக்கே எதிர்கால வேலைவாய்ப்புகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதே இந்த மையத்தின் அடிப்படைச் சிந்தனையாக உள்ளது.
- பரமேஷ் சிதம்பரம், இணை பேராசிரியர், பிட்ஸ் பிலானி டபிள்யு.ஐ.எல்.பி.,
