ஜூன் 02, 2025 12:00 AM
ஜூன் 02, 2025 12:00 AM

சமீப காலமாக எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும், பிறந்த நாள் விழாவில் தொடங்கி திருமணம் வரையில் தன்னைத்தானே அழகுபடுத்திக் கொள்வதை பொதுவாகவே மக்கள் விரும்புகிறார்கள்.
அந்த விதத்தில், இந்தத் துறைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும். இப்போதைக்கு செயற்கை நுண்ணறிவினால் பாதிக்கப்படாத துறையாக இந்த அழகியல் துறை விளங்குகிறது எனலாம்.
இப்படிப்பு தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பமுடையவர்களுக்கும், பிறரை அழகுபடுத்துவதில் ஆர்வமுள்ளவர்களும், நல்ல பேச்சுத் திறன் உள்ளவர்களுக்கும் உகந்த படிப்பாகும்.
முகம், தலை முடி, கை, கால்கள் ஆகியவற்றை அழகுப்படுத்துவது அழகியல். பொதுவாகவே புருவம் வடிவமைத்தல், வேக்ஸிங், பேஷியல், முடி வடிவமைப்பு போன்ற தற்காலிக அழகுபடுத்ததலுக்காக அழகு நிலையங்களுக்கு பலர் செல்கின்றனர். அழகியல் படிப்பில் விதவிதமான அலங்காரங்கள், 'மேக்-அப்'கள் அகியவற்றை பற்றியும் படிக்கலாம்.
அழகு சாதனவியல் (காஸ்மெடாலஜி)
காஸ்மெடாலஜி என்பது தற்காலிக அழகுபடுத்துதல் கிடையாது. முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவது, கரும்புள்ளிகள் மற்றும் மங்குகளை நிரந்தரமாக நீக்குதல், முடியை புதிதாக வளரச்செய்வது, தேவையற்ற ரோமங்களை நீக்குதல், கொழுப்பை கரைத்தல் ஆகியவை 'காஸ்மெடாலஜி'யில் சிகிச்சை முறைகளாக கற்றுத்தரப்படுகின்றன. 'காஸ்மெடாலஜிஸ்ட்' என்பவர்கள் தொழில்முறை வல்லுநர்களாக கருதப்படுகின்றனர்.
பாடத்திட்டம்
மேக்-அப் பற்றி மட்டுமல்லாமல், தோல் பராமரிப்பு, தோல் பராமரிப்பு பொருள்களை ஆராய்தல், கூந்தல் பராமரிப்பு, சரும பராமரிப்பு, முக பராமரிப்பு பற்றி கற்றுத் தரப்படுகிறது. மேலும், காஸ்மெடிக்ஸ் வகைகள், முகத்தின் நிறத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்துதல், மெனிக்யூர், பெடிக்யூர் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் கற்றுத் தரப்படுகிறது.
படிப்பு
சான்றிதழ், டிப்ளமா, பி.எஸ்சி., எம்.எஸ்சி., ஆகிய நிலைகளில் அழகு மற்றும் அழகு சாதனவியல் படிப்புகள் உள்ளன.
வேலை வாய்ப்பு
பிரபலமான பார்லர்கள், சினிமா, ஸ்பா, சின்னத்திரை, தொலைகாட்சி, உடற்பயிற்சி மையம், ஹோட்டல்கள், ரிசார்ட்கள், மாடலிங் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் சொந்தமாக அழகு நிலையத்தை நிறுவலாம்.
ஒப்பனை கலைஞர், சிகை அலங்கார கலைஞர், நக பராமரிப்பு கலைஞர், அழகு ஆலோசகர், ஸ்பா சிகிச்சையாளர், சலூன்களுக்கான விற்பனை ஆலோசகர், உற்பத்தியாளர்களுக்கான விற்பனை பிரதிநிதி, அழகுப் பராமரிப்பு விநியோகஸ்தர், பேஷன் ஸ்டைலிஸ்ட், அழகுசாதனப் பயிற்றுவிப்பாளர், பத்திரிகை எழுத்தாளர், ஆசிரியர் ஆகிய பணி வாய்ப்புகளை பெறலாம்.

