/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பணி அனுபவம் இல்லாமல் தொலைநிலையில் எம்.பி.ஏ.,
/
பணி அனுபவம் இல்லாமல் தொலைநிலையில் எம்.பி.ஏ.,
ஜூலை 16, 2014 12:00 AM
ஜூலை 16, 2014 12:00 AM
நிபுணத்துவ படிப்புகளின் முக்கியத்துவம் கூடிவிட்ட நிலையில், ஒரு முதுநிலை பட்டப் படிப்பு இல்லாமல், பணி வாய்ப்பை பெறுவதென்பது கடினமான காரியமாக உள்ளது. அப்படியே, ஒரு பணி கிடைத்தாலும், அது சற்று கீழ்நிலை அளவிலோ அல்லது முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது.
எனவே, எம்.பி.ஏ., போன்ற ஒரு படிப்பு உங்களின் கைகளில் இருந்தால், அதை நேரடி முறையில் படித்திருந்தாலும் சரி, தொலைநிலையில் படித்திருந்தாலும் சரி, நல்ல பணி வாய்ப்பை உறுதியாகப் பெறலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான மாணவர்கள், எம்.பி.ஏ., படிப்பை, பணி அனுபவம் இல்லாமலேயே மேற்கொள்கிறார்கள். ஐ.ஐ.எம்.,கள் மற்றும் இதர சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மட்டுமே பணி அனுபவம் பெற்றவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
ஆனால், வளர்ந்த நாடுகளைப் பார்த்தால், அங்கு நிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். அங்கே, 4 அல்லது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பிறகே, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்கிறார்கள். பணி அனுபவத்திற்கு பிறகான எம்.பி.ஏ., படிப்பில்தான், ஒருவர், தான் படிக்கும் விஷயங்களின் நடைமுறை தன்மையை எளிதாகப் புரிந்துகொண்டு, அதை நேரடி பணித்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ., மேற்கொள்ள, கட்டாயம் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்பதில்லை. தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ., சேரும் 30 சதவீதத்திற்கும் அதிகமான பேர், பணியில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது படிப்பில் சேர்ந்த பிறகு தங்களின் பணியை தொடங்குபவர்களாக இருக்கிறார்கள்.
தொலைநிலையில் படிப்பதன் மூலம், தனக்கோ அல்லது தன் குடும்பத்திற்கோ தேவையான நிதியாதாரத்தை, பணி செய்வதன்மூலம் எளிதில் பெற முடிகிறது. சில படிப்புகளுக்கு, பணி அனுபவம் என்பது எப்போதும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், தியரியும், நடைமுறை திறனும், சில படிப்புகளில் அதிகம் உரசிக்கொள்ளும்.
முதுநிலைப் படிப்பு என்பது ஒரு உயர்ந்த நிலையிலான படிப்பு. எனவே, அங்கே சிறப்புத் தன்மை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். தகுதியை வைத்தே, ஒருவருக்கு என்ன பணி வாய்ப்புகளை வழங்கலாம் என்பதை ஒரு நிறுவனம் முடிவு செய்கிறது.
வணிகப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து பெருகிக்கொண்டே வருகிறது. ரெகுலர் முறையில் எம்.பி.ஏ., படிக்கும் 3.5 லட்சம் பேரில், ஏறக்குறைய பாதி பேருக்கு பணி வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தொலைநிலைப் படிப்புகளுக்கான செலவு
முழுநேர படிப்புகளைவிட, தொலைநிலைப் படிப்புகளுக்கு செலவு குறைவா? அல்லது அதிகமா? என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக, தொலைநிலைக் கல்வி என்பது, பலரும் சமாளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
ஏனெனில், தொலைநிலைப் படிப்பிற்கான உள்கட்டமைப்பு தேவை என்பது மிகவும் குறைவு. மேலும், தொலைநிலைக் கல்வியில், ஒரு படிப்பிற்கு ஒரு ஆண்டில் இத்தனை நபர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. எத்தனை நபர்களை வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், பணி செய்துகொண்டே படிப்பதால், ஒருவர் பொருளாதார ரீதியில் எந்த சிக்கலையும் எதிர்கொள்வதில்லை. மேலும், நேர விஷயத்தில் இருக்கும் சலுகை மற்றும் விரும்பிய பருவத்தில் தேர்வை எழுதிக் கொள்ளுதல் மற்றும் ஆன்லைன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளால், தொலைநிலைக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் 30% அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

