செப் 23, 2026 12:30 AM
செப் 23, 2026 12:30 AM

விபத்துகளால் ஏற்படும் காயங்கள், நாள்பட்ட மூட்டு வலிகள், நரம்புத் தளர்ச்சி மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து ஒருவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் 'பிசியோதெரபிஸ்ட்'கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இதைத் தவிர, மனித உடலின் தசை இயக்கம், எலும்பு அமைப்பு ஆகியவற்றை அறிவியல் ரீதியாகப் புரிந்துகொண்டு, உடற்பயிற்சிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகளை இயல்பு வாழ்க்கையை பெற செய்வதிலும் இவர்களது பங்கு அளப்பரியது.
படிப்பு
விருப்பமும், தகுதியும் உள்ள மாணவ, மாணவிகள் நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பும், கூடுதலாக ஆறு மாத கால மருத்துவமனைப் பயிற்சியும் கொண்ட பி.பி.டி., என்கிற இளங்கலை பிசியோதெரபி பட்டப்படிப்பில் சேரலாம்.
தகுதிகள்
பிசியோதெரபி துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பிரிவை முதன்மையாகப படித்திருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பாடங்கள்
இளநிலை படிப்பின் போது உடற்கூறியல், தசை மற்றும் எலும்பு செயல்பாடுகள், உடற்பயிற்சி சிகிச்சை முறைகள் ஆகியவை விரிவாகக் கற்பிக்கப்படுகின்றன. படிப்பின் நிறைவுப் பகுதியாக வரும் ஆறு மாத கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சியில், மாணவர்கள் நேரடியாக மருத்துவமனைகளில் தங்கி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நடைமுறை அனுபவத்தை பெறுகின்றனர்.
இதற்கு பிறகு நரம்பியல், விளையாட்டு மருத்துவம், எலும்பியல் அல்லது இதயவியல் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற விரும்பினால், இரண்டு ஆண்டு முதுகலை படிப்பான எம்.பி.டி., பட்டத்தையும் தொடரலாம்.
திறன்கள்
ஒரு சிறந்த பிசியோதெரபிஸ்டாக உருவாவதற்கு மருத்துவ அறிவு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. உடல் உபாதைகளுடன் வரும் நோயாளிகளின் பிரச்சனைகளை முழுமையாகக் கேட்டுப் புரிந்துகொள்ளும் பொறுமையும், கனிவான அணுகுமுறையும் மிக அவசியம்.
மேலும், நோயாளிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை, அவர்களுக்கு புரியும்படி கூற தகவல் தொடர்பு திறன் தேவைப்படுகிறது. நீண்ட நேரம் நின்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருப்பதால், உடலை வலிமையாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
வேலைவாய்ப்பு
தொடர்ந்து, படிப்பை முடித்த பிறகு பொது மருத்துவமனைகள், தனியார் கிளினிக்குகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், தற்போது விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியைப் பராமரிக்க விளையாட்டுக் கழகங்கள் பிசியோதெரபி நிபுணர்களைப் பெருமளவில் பணியமர்த்துகின்றன.
அதே போல் ஊழியர்களுக்கு ஏற்படும் கழுத்து, முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கார்ப்ரேட் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. சொந்தமாக சிகிச்சை மையம் அமைத்துத் தனிப்பட்ட முறையிலும் சுயதொழில் தொடங்க முடியும் என்பதால், இது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் கொண்ட சிறந்த மருத்துவக் கல்வியாக இது விளங்குகிறது.
