டிச 29, 2015 12:00 AM
டிச 29, 2015 12:00 AM
புள்ளி விவர சிந்தனையில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் அறிய வேண்டிய ஒரு நிறுவனம் ‘இந்தியன் ஸ்டேடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட்’!
1931ம் ஆண்டு பேராசிரியர் பி.சி. மகாலானோபிஸ் என்பவரால் கொல்கத்தாவில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. டில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தேஷ்பூர் ஆகிய நகரங்களிலும், இதற்கு கல்வி மையங்கள் உள்ளன.
கல்வித் திட்டம்
இளநிலை
இளநிலை புள்ளியியல் (ஹானர்ஸ்) பட்டப் படிப்பு கொல்கத்தாவிலும் மற்றும் இளநிலை கணிதம் (ஹானர்ஸ்) பட்டப் படிப்பு பெங்களூருவிலும் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
தகுதி: கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். எழுத்துத்தேர்வில், மேல்நிலை கல்வி அளவில் கணிதப் பாடங்களில் இருந்து, ‘மல்டிபில் சாய்ஸ் அன்ட் டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்திய அணுசக்தித் துறை சார்பில் நடத்தப்படும், ‘சர்வதேச கணித ஒலிம்பியாட்’ பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, அவர்களது செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதுநிலை
முதுநிலை புள்ளியியல் (எம்.ஸ்டாட்) பட்டப் படிப்பு டில்லி மற்றும் சென்னையில் உள்ள இந்தியன் ஸ்டேடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட்டி-ல் வழங்கப்படுகிறது.
தகுதி: இளநிலை புள்ளியியல் பாடப் பிரிவில் தேர்ச்சி அல்லது புள்ளியியல் பாடத்துடன் பி.இ., / பி.டெக்., அல்லது போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் ஸ்டேடிஸ்டிகல் அப்ளிகேஷன் போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: இக்கல்வி நிறுவனத்திலேயே இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மட்டும் நேரடியாக முதுநிலை பட்டப் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர். மற்ற அனைத்து மாணவர்களும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பிற படிப்புகள்: எம்.எஸ்., (குவான்டிடேடிவ் எக்னாமிக்ஸ்), எம்.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ்) மற்றும் எம்.டெக்., (குவாலிட்டி ரீலைபிலிட்டி ஆப்ரேசன் ரீசர்ச்) போன்ற முதுகலை பட்டப் படிப்புகள் கொல்கத்தா மையத்தில் வழங்கப்படுகிறது. மேலும், பகுதி நேர சான்றிதழ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
வாய்ப்புகள்: இயற்கை மற்றும் சமூக அறிவியலுடன் தொடர்புடைய புள்ளியியல் துறையில், பட்டப்படிப்பு முடித்து வெளிவரும் மாணவர்கள், ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் ஆய்வகங்கள், அரசு துறைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகளை பெற முடியும். இத்துறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கான வாய்ப்பும், சலுகையும் பிரகாசம்!

