தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தமிழகத்தில் தரமான பொறியாளர் உருவாக வேண்டுமா?

தமிழகத்தில் தரமான பொறியாளர் உருவாக வேண்டுமா?

தமிழகத்தில் தரமான பொறியாளர் உருவாக வேண்டுமா?


டிச 31, 2015 12:00 AM

டிச 31, 2015 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 31, 2015 12:00 AM டிச 31, 2015 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாடப்புத்தகத்தை மட்டும் மனப்பாடம் செய்து அப்படியே எழுதினால் போதும். புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற நிலை இன்று பள்ளிகளில் உள்ளது. அதையே, கல்லூரியிலும் கடைபிடிக்க முயல்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். புத்தக படிப்பைவிட, செயல்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்!

பாடப்புத்தகம் என்பது ஒரு அளவுகோல். பொறியியல் கல்வி என்பது உருவாக்குதல். படித்து தெரிந்துகொள்வதைவிட, செயல்முறையில் பயிற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் மிக அதிகம். 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசியை தேடி நாம் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், இன்று அது நம் சட்டை பாக்கெட்டுக்குள்ளேயே கிடக்கிறது. அதேபோல், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து அதை உருவாக்குபவன் தான் இன்ஜினியர்!

தொழில் முனைவோராகுங்கள்
இன்றைய மாணவர்கள் வேலை வாய்ப்பை மட்டுமே நம்பி, தொழில் நிறுவனங்களை எதிர்பார்த்து, காத்திருக்கக்கூடாது. சுயமாக ஆராய்ந்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சந்தைப்படுத்தி, மக்களிடம் கொண்டு செல்லும் திறன்மிக்க தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும்! தனி மாணவனால் இதை செய்ய முடியாது என்றால், ஐந்து மாணவர்கள் இணைந்து செயல்படலாம்.

தொழில்முனைவோரை ஊக்குவிக்க அரசாங்கம், வங்கிகள் பல திட்டங்களையும், சலுகைகளையும் வழங்குகிறது. இதுகுறித்த அறிவை கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு தெளிவாக வழங்கவேண்டும். தொழில் துவங்க கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என்ன, தேவையான அம்சங்கள் என்ன, தேவைப்படும் முதலீடு எவ்வளவு போன்ற பல விசயங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் துறை சார்ந்த ‘நெட்வொர்க்’ நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும்.

சர்வதேச ஆய்வகம்
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஆய்வகத்தை நிறுவியுள்ளன. ஆனாலும், அது போதாது. செயல்முறை பயிற்சி அதிகம் மிகுந்த பொறியியல் படிப்பை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த, நவீன ஆய்வகம் வேண்டும். அங்கு உலகில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்பமும் இடம்பெற வேண்டும்.

ஒரு மெக்கானிக்கல் துறை மாணவர் அங்கு சென்றால், நாட்டில் உள்ள அனைத்து இயந்திரமும் அங்கு இடம்பெற்றிருக்க வேண்டும். இதை தனியாரால் செய்ய முடியாது; ஒவ்வொரு கல்லூரியிலும் இதை அமைப்பது சாத்தியமில்லை. எனவே, அண்ணா பல்கலைக்கழகமும், அரசாங்கமும் இணைந்து இந்த பிரம்மாண்ட ஆய்வகத்தை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் மாணவர்களும் தலா ஒரு வார காலம் அங்கு பயிற்சி பெறும் வகையில் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, அந்தந்த கல்லூரியிடம் இருந்து வசூலிக்கலாம். இவ்வாறு சர்வதேச நவீன ஆய்வகம் அமைந்தால், தமிழகத்தில் பொறியியல் கல்வியின் தரம் மென்மேலும் உயரும்; இதன்மூலம், தரமான பொறியாளர்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

-டி.ஜே.கோவிந்தராஜன், தலைவர், டி.ஜே.எஸ்., கல்வி நிறுவனங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us