ஜூலை 12, 2024 12:00 AM
ஜூலை 12, 2024 12:00 AM

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பார்க் அறக்கட்டளையின் கீழ், தற்போது பொறியியல், கடல்சார், கட்டடக்கலை, பாராமெடிக்கல், டிப்ளமோ, பிசினஸ் ஸ்கூல் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என 20 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆசிரியர்கள் அவசியம்
உலகம் முழுவதிலுமே அனுபவமிக்க ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவும் நிலையில், கல்வி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சில நாடுகள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணித்து, அப்போதைய தேவையை பூர்த்தி செய்ய முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்கின்றன. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக ஆசிரியர் மேம்பாட்டிற்கு பயன்படுத்தி, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
நம் நாடும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய விரும்பும் குடும்பங்கள் அதிகம் உள்ளதால், இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பையே பிரதான தேர்வாக கொண்டுள்ளனர்.
முன்னாள் மாணவர்கள் முக்கியம்
மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில், நவீன படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பார்க் கல்வி நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான முன்னாள் மாணவர்களை கொண்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்னாள் மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பார்க் கல்வி நிறுவனங்கள் என்றுமே முன்னாள் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதால், தற்போதைய மாணவர்களுக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் எளிதாகிறது.
வாய்ப்புகள் ஏராளம்
முன்பு இன்ஜினியரிங் துறையில் 5 பிரிவுகளே பிரதானமாக இருந்தன. இன்று, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட பிரிவுகளாக விரிவடைந்துள்ளன. இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் என்றுமே பிரகாசமாகவே உள்ளன. எனினும், ஒவ்வொருவரின் திறன்களை பொறுத்தே வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்று வாய்ப்புகள் ஏராளமாக உள்ள நிலையில், அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள கல்லூரியில் படிக்கும்போதே திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
-அனுஷா ரவி, சி.இ.ஓ., மற்றும் தலைவர், பார்க் கல்வி நிறுவனங்கள், கோவை
info@park.ac.in