/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தேடினால்... வேலை நிச்சயம் கிடைக்கும்!
/
தேடினால்... வேலை நிச்சயம் கிடைக்கும்!
ஆக 01, 2015 12:00 AM
ஆக 01, 2015 12:00 AM
கடந்த 1985ம் ஆண்டுமுதல் கல்வித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க துவங்கியது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாவது நல்ல விஷயம். எண்ணிக்கை அதிகமானால் தான் தரமும் அதிகரிக்கும்!
2000ல் இருந்து 10 ஆண்டுகளில் தகவல்தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது. இதற்கான மனித வளத்தை யார் கொடுத்தார்கள் என்பதை பார்த்தாலே தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தொழிற்கல்வி உரிய முக்கியத்துவம் பெறும் போதுதான், உயர்கல்வி சரியான திசையை நோக்கி பயணிக்கும்!
தேவை என்ன?
அன்றைய காலத்தில், ஒரு மருத்துவரே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால், இன்று பலவிதமான நோய்கள், அதற்கான பல நவீன சிகிச்சை முறைகள் என்ற நிலை இருப்பதால், அதற்கான சிறப்பு பிரிவுகள் விரிவடைந்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிபுணர் தேவைப்படுகிறார். அதுபோலத்தான், இன்ஜினியரிங் துறையிலும், தற்போதைய தேவைக்கு ஏற்ப ஏரளாமான புதிய பிரிவுகள் உருவாகியுள்ளன. அவற்றிலும் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
பாடப்பிரிவை தேர்வு செய்வதில் குழப்பத்திற்கு ஆளாகக் கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் இன்டர்நெட் பயன்படுத்த தெரியும்; பாடப்பிரிவுகள் குறித்த தகவல்களையும் எளிதில் பெற முடியும். உண்மை என்ன என்பதை சரியாக புரிந்துகொண்டு, பிறகு முடிவு எடுக்க வேண்டும். கனவு தேவை தான்; அதேசமயம் பிராக்டிக்கலாக செயல்படுவதும் அவசியம் தானே?
சொந்த விருப்பம், குடும்ப சூழ்நிலை இரண்டையும் வைத்தே தங்களுக்கான துறையை மாணவர்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பது எனது கருத்து. படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டுமா? உயர்கல்வி கற்கவேண்டுமா? ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமா? ஆகியவற்றைப் பொறுத்து பாடத்தை தேர்வு செய்யவேண்டும். தனக்கு என்ன தேவை என்பதை மாணவர்கள் தான் சொல்ல வேண்டும்!
வேலை கிடைக்கும்
பலர் வேலைக்கான திறன் குறைவு என்று கூறுவதை கேட்க முடிகிறது. உரிய தொழிற்பயிற்சி திறன் குறைவையே ‘பணித் திறன் குறைவு’ என்ற நிலையாக கூறப்படுவதாக யூகிக்கிறேன். பிரபல ஐ.டி., நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அந்த நிறுவனங்களே, மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கி, வேலை வாய்ப்பை பெறுவதற்கான தகுதியுடையவர்களாக மாற்றுகின்றனர். அதேபோல், ‘கோர்’ நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டால், வேலைக்கான திறன் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கே இடமில்லாமல் போகும்.
வேலை வாய்ப்பை பொறுத்தவரை, தங்களது வீட்டருகிலேயே தேடினால் குறைவாக இருக்கும். சென்னை போன்ற மாநகர அளவில் தேடினால் சற்று அதிகமாக இருக்கும், மாநில அளவில் தேடினால் அதைவிட அதிகமாக இருக்கும், நாடு முழுவதும் தேடினால் மிக அதிகமாக இருக்கும். உலகளவில் தேடினால்.... வேலை நிச்சயம் கிடைக்கும்.
-தங்கம் மேகநாதன், சேர்பர்ஷன், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள்.

