ஆக 04, 2015 12:00 AM
ஆக 04, 2015 12:00 AM
நமது பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பேசி வருகிறார்... இதனால், இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்!
நமது திறமையை நம்பித்தான் வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கு தொழில் துறையில் முதலீடு செய்கின்றன. அதற்கு தேவையான மனித ஆற்றல், திறன் நம்மிடம் இல்லை என்றாலோ அல்லது இதை நம்மால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டாலோ, இத்திட்டம் தோல்வியைத் தான் சந்திக்கும்.
இத்திட்டம் வெற்றியடைவதில் பெறும் பங்கு இன்ஜினியர்களுக்குத்தான் உள்ளது. ஒரு தொழில் நிறுவனம் புதியதாக துவங்கப்படும் பட்சத்தில், ஆயிரம் தொழிலாளர்கள் தேவை என்றால், அதில் நூறு இன்ஜினியர்களும் தேவை. கணக்களார், மேலாளர் போன்ற பொறுப்புகளுக்கான ஆட்கள் தேவை வெகு குறைவு தான்!
அச்சுறுத்தும் கவனச்சிதறல்
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவருகின்றன. அத்தகைய தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்த தெரிந்த இந்தியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், இன்றைய மாணவர்களிடம் இருக்கும் கவனச்சிதறல் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்குமோ என்று அஞ்ச தோன்றுகிறது!
மொபைல், இன்டர்நெட் ஆகியவற்றை பெரும்பாலான மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த தெரியாததால், பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களின் ஓய்வு நேரம் வெகுவாக குறைந்து விட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் உறங்கச் செல்கின்றனர். மறுநாள் வகுப்பறைக்கு அயர்ந்து, உற்சாகமின்றி வருகின்றனர். ஸ்மார்ட் போன், இன்டர்நெட் ஆகியவற்றை சரியாக பயன்படுத்தினால், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்!
பிரகாசமாகும் வேலை வாய்ப்பு
இன்றைய உலகமயமாக்கல் காலத்தில், உயர்கல்வி பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது. உயர்கல்வி பாடத்திட்டத்துடன், தொழில் நிறுவனங்களுக்காக ஒரு கூடுதல் பாடத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கு தேர்வு தேவையில்லை என்றாலும், முறையாக பயிற்சிபெற்று திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காவிட்டால், அவர்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதே தவிர, கல்லூரியோ, இன்ஜினியரிங் படிப்பு முறையிலோ தவறு இல்லை. இவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவது என்பது கல்லூரியால் மட்டுமே முடியாது. அத்தகைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் உரிய முயற்சி எடுப்பது முக்கியம்.
‘நம் நாட்டிற்கு மீண்டும் பெரும் வளர்ச்சி இருக்கிறது’ என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே மாணவர்கள் உணர வேண்டிய ஒன்று. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை கல்லூரியை விட்டு, வெளியே வரும்போதே பெற்றிருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்!
-ஜே.கார்த்திகேயன், துணைத் தலைவர், ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்கள்.

