அக் 08, 2011 12:00 AM
அக் 08, 2011 12:00 AM
நல்ல சம்பளத்தில், ஏராளமான சலுகைகளுடன் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அதுபோன்ற பணி கிடைப்பது எளிதல்ல என்பதும் நம்மில் பலருக்கும் தெரியும். நீங்கள் விரும்பும் பணியைப் பெறுவதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் சில உங்களின் கட்டுப்பாட்டில் அடங்காதவை. உதாரணமாக, உங்களுடன் அந்தக் குறிப்பிட்ட பணிக்குப் போட்டியிடும் வேறு விண்ணப்பதாரர்களின் திறமை, தகுதிகள், அனுபவம் மற்றும் பணிக்கானப் பொருத்தம் போன்றவற்றை நீங்கள் தீர்மானிக்க முடியாது. கட்டுப்படுத்த முடியாத இத்தகைய அம்சங்களை மீறி, உங்களால் சிறப்பாக செய்ய முடிந்த ஒன்று எதுவெனில், உங்களின் தகவல்தொடர்புத் திறன்தான்(Communication skills). ஒரு சிறந்தப் பணியைப் பெறுவதில், இந்த தகவல்தொடர்புத் திறன் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.
பணி தொடர்பான தகவல்தொடர்பு
பணி தகவல்தொடர்பு என்பது வேலை வாய்ப்புக் கடிதங்கள், விண்ணப்பங்கள், சுருக்க விபரங்கள்(Resume) ஆகியவற்றை எழுதுதல் மற்றும் வேலைக்கான நேர்முகத் தேர்வுகள் மற்றும் குழு விவாதங்களில் கலந்து கொள்ளுதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு பணியைப் பெறுவதில் ஒருவருக்கு வெற்றியைக் கொடுக்கும் காரணிகளாக, கவரும் விதத்தில் சுருக்க விபரம் தயாரித்தல், சிறப்பான கோரிக்கைக் கடிதம் எழுதுதல் மற்றும் நல்ல முறையில் நேர்முகத் தேர்வில் செயல்படுதல் போன்றவை திகழ்கின்றன.
ஒரு குறிப்பிட்ட பணிக்கு ஒரு குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யும் முன்பாக, அதிகளவிலான விண்ணப்பதாரர்களை ஒரு நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதில் வெற்றியாளர் என்று ஒருவர் இருக்கையில், ஏராளமான தோல்வியாளர்களும் இருக்கின்றனர். ஒரு விண்ணப்பதாரரை, அவரின் சுருக்க விபரம், கல்வித் தகுதி, அனுபவம், திறமை மற்றும் கோரிக்கை கடிதம் போன்ற பல விஷயங்களை வைத்து ஒரு நிறுவனம் மதிப்பிடுகிறது. மேலும், நேர்முகத் தேர்வு, தொலைபேசி வழி கலந்துரையாடல், குழுக் கலந்துரையாடல் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன. எனவே, பணிக்கான தகவல்தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
பணிக்கான தகவல்தொடர்பின் இயல்பு
* ஒரு வேலைவாய்ப்பு சூழலில், பணிக்கான தகவல்தொடர்பு திறன் என்பது பலவித உபகரணங்கள் மற்றும் நுட்பங்களைக் கொண்டது. பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, உங்களது செயல்பாட்டினால் நீங்கள் வேலை வழங்குநரை குழப்பவும் செய்யலாம். மேலும், அதுசம்பந்தமான தொடர்ச்சியான செயல்பாட்டில் நீங்கள் பலவித தவறுகளையும் செய்ய நேரிடும். எனவே, பணிக்கான தகவல்தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்வது முக்கியமாகிறது.
* பணிக்கான தகவல்தொடர்பு என்பது பிறவகை தகவல்தொடர்பு வகைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. நல்ல அமைப்பு முறையையும், தெளிவான நோக்கத்தையும், தேவையான ஆட்களுக்கு தேவையான தகவல்களையும் சரியாக கடத்துவதாக இருக்க வேண்டும். இத்தகைய தகவல்தொடர்பின் முக்கிய அம்சம் அதன் உட்பொருள்(Content), அதாவது உங்களின் அறிவு மற்றும் திறன்கள். உங்களின் அறிவு, திறமை, அனுபவம் போன்ற முக்கிய விஷயங்களைப் பற்றி பணி வழங்குநரிடம் நீங்கள் விளக்கும்போது, பணிக்கான தகவல்தொடர்பு என்பது முக்கிய இடம் வகிக்கிறது.
* ஒரு வெற்றியாளர் என்பவர், எப்போதுமே, தனது அணுகுமுறைகளில் புதிய அம்சங்களைக் கடைபிடிப்பவராகவும், சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்பவராகவும் இருப்பார்.
* பணிக்கான தகவல்தொடர்பு என்பது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தையும், தன்மையையும் கொண்டது. ஒரு வேலை வழங்குநரிடம், அந்த வேலைக்காக விண்ணப்பம் செய்பவர், தன்னைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, அந்த வேலையைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் அவர் வெற்றியடைந்து அந்தப் பணியைப் பெற வேண்டுமெனில், தனது பேச்சு, எழுத்து, நடை-உடை பாவனைகள், சிறப்பான வகையில் தேவையான ஆவணங்களை தயார் செய்தல் போன்ற அத்தியாவசியத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் பணிக்கான தகவல்தொடர்பு.
