அக் 18, 2011 12:00 AM
அக் 18, 2011 12:00 AM
ஒரு பணியைப் பெறுவதன் பொருட்டு, ஒரு நிறுவனத்திற்கு ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களுடன் அளிக்கும் ஆவணம் ரெஸ்யூம் எனப்படும். இந்த வகையைச் சேர்ந்த CV மற்றும் பயோடேட்டா போன்ற பிற ஆவணங்கள் இருந்தாலும், ஒவ்வொன்றின் குறிப்பிட்ட பயன்பாடு மற்றும் அம்சங்கள் குறித்து அறிய வேண்டியது அவசியம். இந்தக் கட்டுரையானது, ரெஸ்யூம் என்ற ஆவணத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அலசுகிறது.
ரெஸ்யூம் என்பதன் கருத்தாக்கம்
ஒரு தொழில்முறை பணிவாய்ப்புக்காக, ஒருவரின் கல்வி, தொழில்முறைப் பயிற்சி, அனுபவம், தனித் திறமைகள், திறன்கள், சாதனைகள் மற்றும் குறிப்புகள் முதலிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வேலை வழங்குநருக்கு(Employer) அளிக்கப்படும் ஆவணமே ரெஸ்யூம் ஆகும். உங்களுக்கான ஒரு வேலையை, பலவித போட்டிகளுக்கு இடையில் பெறும்பொருட்டு, உங்களைத் தனிப்படுத்திக் காட்டும் ஆவணம்தான் ரெஸ்யூம்.
வேலை வழங்குநரை எளிதில் கவரும் விதமாக உங்களின் ரெஸ்யூம் இருப்பது மிகவும் முக்கியம். அந்த முறையில் ரெஸ்யூம் தயாரிப்பதில் பல நுணுக்கங்களும், குறிப்பிட்ட வழிமுறைகளும் உள்ளன.
ரெஸ்யூம் வடிவமைப்பு
ரெஸ்யூம் என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட வடிவமைப்பும் கிடையாது. ஒரு தனிநபரின் பின்னணி, வேலைவாய்ப்புத் தேவைகள், தொழில் லட்சியங்கள் போன்ற பலவித அம்சங்களை ரெஸ்யூம் வடிவமைப்பு சார்ந்துள்ளது. வேலைவாய்ப்பு போட்டியில் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டுமெனில், உங்களது ரெஸ்யூமானது, உங்களின் ஆளுமைத் திறன்(Personality), உங்களது பணி விருப்பம் மற்றும் எதிர்கால பணி லட்சியம் போன்ற அம்சங்களை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்க வேண்டும்.
வேறு நபரின் ரெஸ்யூமை பின்பற்ற வேண்டாம். உங்களுக்கான தனித்தன்மையுடன் உங்களின் ரெஸ்யூம் இருக்கட்டும். சிறந்த முறையில் ரெஸ்யூம் தயாரிப்பதற்கு, அதற்கென இருக்கும் மென்பொருளையோ அல்லது அதுசார்ந்த நிபுணர்களின் உதவியையோ நாடலாம். அதேசமயம், உங்களின் தேவை என்ன என்பதை பிரிதிபலிக்கும் விதமாக ரெஸ்யூம் இருக்க வேண்டும்.
நீங்கள் பொது மாடலில் ஒரு ரெஸ்யூம் தயாரித்து வைத்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போதும் அதற்கேற்ப அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
ரெஸ்யூம் அளவு(Length of Resume)
ரெஸ்யூம் என்பது இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட வரைமுறை எதுவும் இல்லை. வேலை வழங்குநர்கள் பொதுவாக ஆரம்பநிலை பணிக்கான ஒரு ரெஸ்யூமை பார்ப்பதற்கு மிகக்குறைந்தளவு நேரத்தையே ஒதுக்குகிறார்கள். ஒருவேளை, பணியின் தன்மை மிகவும் முக்கியமானதாக இருந்தால் ரெஸ்யூம் பார்க்க அதிகநேரம் எடுக்கப்படுகிறது. பல வேலைவாய்ப்பு சர்வேக்கள், ஆரம்ப நிலைப் பணிகளுக்கு 1 பக்க ரெஸ்யூம் போதும் மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பணிகளுக்கு 2 பக்க ரெஸ்யூம்கள் போதும் என்றே பரிந்துரைக்கின்றன. ஆனால், சில வேலை வழங்குநர்களை, 1 பக்க ரெஸ்யூமைவிட, 2 பக்க ரெஸ்யூம்களே(அனைத்துவித பணிகளுக்கும்) கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் எந்தமாதிரியான பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் மற்றும் அதற்குப் பொருத்தமாக உங்களிடம் என்னென்ன திறன்கள் உள்ளன என்பதை ரத்தின சுருக்கமாக குறிப்பிட்டு தயாரிக்கப்பட்ட ரெஸ்யூம்கள், வேலை வழங்குநரை கவர்பவையாக உள்ளன.
ரெஸ்யூமின் பகுதிகள்
தலைப்பு
இப்பகுதியில், உங்களின் பெயர், முழுமையான முகவரி, தொலைபேசி எண்கள், பேக்ஸ் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவை இருக்கும். பொதுவாக, உங்களைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் இதில் இருக்கும்.
விரும்பும் பணி(Position Sought)
நீங்கள் எந்தப் பணிக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால்தான், பிறவகைப் பணிகளுக்கான ரெஸ்யூம்களிலிருந்து உங்களின் ரெஸ்யூமை தனித்து வேறுபடுத்த, வேலை வழங்குநரால் முடியும். அதேசமயம், ஏதேனும் ஒரு பணி கிடைத்தால் போதும் என்று அளிக்கப்படும் ரெஸ்யூம்களுக்கு இந்தப் பிரிவு தேவையில்லை.
பணி குறிக்கோள்(Career objective)
இந்த அம்சம் உங்கள் ரெஸ்யூமின் முக்கியப் பகுதியாகும். நீங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்கிறீர்களோ, அதன்பாலான உங்களின் விருப்பம் மற்றும் தகுதிகள் போன்றவை உங்கள் ரெஸ்யூமில் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்டப் பணி மீதான உங்களின் ஆர்வத்தை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்திருக்க வேண்டும்.
அதேசமயத்தில், பணிக் குறிப்பிடாமல், பொதுவில், ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, பணி குறிக்கோள் பொதுவானதாக இருக்க வேண்டும்.
தொழில்முறைத் தொகுப்பு(Professional Summary)
சில ரெஸ்யூம்களில் பணி குறிக்கோள் இருக்கும் இடத்தில், தொழில்முறை தொகுப்பு இருக்கும். ஒரு வரி கொண்ட இந்த தொகுப்பில், உங்களின் முக்கியத் தகுதி, அடிப்படை திறன்கள் மற்றும் முக்கியமான பணி அனுபவம் போன்றவை அடங்கியிருக்கும். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான உங்களின் கடந்தகால அனுபவம், கல்வித் தகுதி மற்றும் திறன்களை நீங்கள் குறிப்பிட விரும்பினால், இந்த விஷயங்களை நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
கல்விப் பகுதி
இப்பகுதியில் நீங்கள் படித்த கல்வி நிறுவனம், முடித்த ஆண்டுகள், பள்ளி மற்றும் பட்டப் படிப்புகளின் விபரங்கள், படித்த ஊர்கள் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அதேசமயம், நீங்கள் கலந்துகொண்ட பயிற்சி வகுப்புகள், சிறப்பு படிப்புகள், கருத்தரங்கங்கள் மற்றும் வொர்க்ஷாப்புகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று.
பணி அனுபவம்
இந்தப் பகுதியில், உங்களின் கடந்தகால பணிகள் மற்றும் தொழில்முறை அனுபவங்கள் பற்றி, தெளிவாகவும், சுருக்கமாகவும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்தப் பகுதியில் உங்களின் விபரங்களை வழங்குகையில், மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் இந்த விவரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
உங்களின் கடந்தகால பணி விபரங்களை பட்டியலிடுகையில், சமீபத்தில் நீங்கள் பார்த்த பணி விபரம் முதலில் வர வேண்டும். நீங்கள் முதன்முதலில் செய்த பணி விபரம் இறுதியாக வர வேண்டும். இந்த வரிசையில்தான் விபரங்கள் இருக்க வேண்டும். உங்கள் பதவியின் பெயர், நிறுவனத்தின் பெயர், பணியின் காலம், இடம் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சிறப்புத் திறன்கள் மற்றும் அம்சங்கள்
நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்குப் பொருத்தமாக உங்களிடம் இருக்கும் திறன்கள் மற்றும் சிறப்பம்சங்களை இந்தப் பகுதியில் தெளிவாக நீங்கள் குறிப்பிட வேண்டும்.
செயல்பாடுகள் மற்றும் விருப்பங்கள்(Activities and Interests)
உங்களின் பலவித திறன்சார்ந்த நடவடிக்கைகள், நீங்கள் வென்ற பரிசுகள், பொழுதுபோக்குகள் மற்றும் விருப்பங்கள் பற்றி இப்பகுதியில் தெரிவித்திருக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற தகுதிகள் ஒரு மனிதனை ஆற்றல் வாய்ந்தவராகவும், சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளவராகவும் காட்டும். இதுபோன்ற நபர்களையே நிறுவனங்கள் பொதுவாக விரும்புகின்றன.
சாதனைகள் மற்றும் அங்கீகாரங்கள்
இப்பகுதியில், நீங்கள் பெற்ற உதவித்தொகைகள், விருதுகள், பதக்கங்கள், பாராட்டுகள், அதிகாரப்பூர்வ சான்றழிப்புகள், சான்றிதழ்கள் போன்ற அம்சங்களைப் குறிப்பிட வேண்டும். ஏனெனில், இதுபோன்ற தகுதிகள், நீங்கள் பிறரைவிட மதிப்பு வாய்ந்தவர்கள் என்ற எண்ணத்தை வேலை வழங்குநர்களிடம் ஏற்படுத்தி, உங்களுக்கான பணி வாய்ப்பை அதிகரிக்கும்.
பரிந்துரை(Reference)
பல நிறுவனங்கள் ஆட்களைப் பணியில் சேர்க்கும்போது, அவர்களைப் பற்றி விசாரிக்க, வேறு ஏதேனும் சில நபர்களைப் பரிந்துரை செய்யுமாறு கேட்கும். எனவே நீங்கள் அதற்கான பொருத்தமான நபரை பரிந்துரைக்க வேண்டும். அந்த நபர் உங்களைப் பற்றியும், உங்களின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் நன்கு தெரிந்தவராக இருத்தல் வேண்டும். அப்போதுதான் விசாரணையின்போது பிரச்சினை வராது.
ரெஸ்யூம் நடைகள்(Resume Styles)
அங்கீகரிக்கப்பட்ட 3 வகையான ரெஸ்யூம் நடைகள் உள்ளன. அவை, காலக்கிரம(Chronological) ரெஸ்யூம், செயலாக்க(Functional) ரெஸ்யூம் மற்றும் ஒருங்கிணைந்த(Combination) ரெஸ்யூம் போன்றவை.
காலக்கிரம ரெஸ்யூம்
இது அதிகளவில் பயன்படுத்தப்படும் ரெஸ்யூம் முறையாகும். கல்வி மற்றும் அனுபவம் போன்ற அம்சங்கள் இதில் முக்கிய இடம் பெற்றிருக்கும். இந்தவகை ரெஸ்யூம்களில், கல்வி மற்றும் வேலை அனுபவங்கள் தலைகீழ் முறையில் அடுக்கப்பட்டிருக்கும். அதாவது கடைசியாக முடித்தப் படிப்பு முதலிலும், கடைசியாகப் பார்த்த வேலை முதலிலும் இருக்கும்.
செயலாக்க ரெஸ்யூம்
இந்தவகை ரெஸ்யூம்களில் செயல்பாட்டுத் திறன் மற்றும் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சில வேலை வழங்குநர்கள், ஒரு விண்ணப்பதாரரின் திறன்கள் மற்றும் சாதனைகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். எனவே இத்தகைய விஷயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ரெஸ்யூம்
பெயருக்குத் தக்கவாறு, முந்தைய 2 வகை ரெஸ்யூம்களின் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ரெஸ்யூம் இதுவாகும். இந்தவகை ரெஸ்யூம், ஒரு விண்ணப்பதாரரின் திறன்களை மட்டுமே கூறாமல், அவரின் கல்வி மற்றும் வேலை அனுபவம் போன்ற விஷயங்களையும் தெளிவாக தெரிவிக்கிறது.
பலரையும் கவரும் ஒரு ரெஸ்யூமை தயார் செய்வது எப்படி?
தொழில்முறை அம்சம்
உங்கள் ரெஸ்யூமை ஒரு சிறந்த கவர்ச்சிகரமான ரெஸ்யூமாக மாற்ற, அதன் வடிவமைப்பை சரியான வகையில் முடிவுசெய்வது முக்கியம். உங்களது பின்னணி, வேலை வாய்ப்புத் தேவைகள் ஆகியவற்றை வைத்து அவற்றை நீங்கள் முடிவு செய்யலாம். உங்கள் ரெஸ்யூமை எளிதில் படிக்கும் விதத்தில் மாற்ற, ஒவ்வொரு வகையான விபரங்களையும் தனிப்படுத்தி மற்றும் முக்கியப்படுத்தி(Highlight) குறிப்பிட்டிருக்க வேண்டும். முறையான இடைவெளிகள், பொருத்தமான உப தலைப்புகள் ஆகியவற்றுடன், கணினிக்கு ஏதுவான(Computer friendly) வகையிலும் உங்களது ரெஸ்யூம் இருக்க வேண்டும். அதற்காக மிகையான அலங்காரம் தேவையில்லை.
பொருத்தமான எழுத்து நடை
ஒரு வர்த்தக ரீதியான அமைப்பு முறையை உங்கள் ரெஸ்யூமில் பின்பற்றுவதுடன், வார்த்தைகள் பயன்பாடு மற்றும் வரிகளின் அமைப்பு போன்றவை ஒரேமாதிரியாகவும், முறையாகவும் இருத்தல் முக்கியம். அதிகளவிலான விஷயங்களை உங்களது ரெஸ்யூமில் சேர்க்க வேண்டியிருந்தால், சுருக்கமான மொழி நடையைப் பயன்படுத்தவும்.
எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை இருக்கிறதா என்று திரும்ப திரும்ப சோதனை செய்து கொள்ளவும். அப்படி ஏதேனும் இருந்தால், உங்கள் ரெஸ்யூம் மீதான மதிப்பு குறைந்துவிடும்.
