நவ 22, 2011 12:00 AM
நவ 22, 2011 12:00 AM
முனைவர் பட்டம் என்பது ஒரு காலத்தில் ஒரு பெரிய விஷயமாக கருதப்படும். ஒரு மனிதரின் ஒரு துறைசார்ந்த நிபுணத்துவத்தை அவரின் முனைவர் பட்டம் தெரியப்படுத்துவதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது. பல பல்கலைக்கழகங்களில் முனைவர்(Ph.d) பட்டத்தை மிக எளிதாக பெற்றுவிடும் நிலை உள்ளது. ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்முகத் தேர்வு, கோர்ஸ்வொர்க், ஆராய்ச்சிப் பணியின் தீவிரமான அளவீடு போன்ற தடைகளைத் தாண்டி ஒருவர் எளிதாக முனைவர் பட்டத்தைப் பெற்றுவிட முடியும். உங்களிடம் ஒரு முதுநிலைப் பட்டமும், சிறிதுகாலம் காத்திருப்பும் இருந்தால் போதும், Ph.d உங்கள் கைக்கு வந்துவிடும்.
கல்லூரி பேராசிரியர் பணிக்கு, கட்டாயம் தேவைப்படும் நெட்(NET) தேர்வு தகுதிக்கு மாற்றாக, இந்த முனைவர் பட்ட தகுதியை UGC - University Grants Commission ஏற்றுக்கொண்டதிலிருந்து, முனைவர் பட்டத்தை நோக்கி படையெடுக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. முனைவர் பட்டம் பெற்றவர்கள், பல உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறான பணி வாய்ப்புகளைப் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில், பல பல்கலைகள், தொலைதூர முறையில், முனைவர் பட்டப் படிப்பை வழங்கத் தொடங்கிவிட்டன, UGC அதற்கான ஒரு வழிமுறையை வகுக்கும் முன்பாகவே.
ஒருவர் குறைந்தபட்சம் 2 முதல் 3 லட்சம் வரை செலவழிக்க தயாராக இருந்தால் போதும். அதேசமயம், சரியான நபரிடம் அந்தப் பணம் போய்சேர வேண்டும். இதன்மூலம் ஒருவர் தனது Ph.d பட்டத்தை உறுதிசெய்து கொள்கிறார். சில பல்கலைகள், பதிவுசெய்தல், கோர்ஸ்வொர்க், தீசிஸ் மற்றும் வைவா(viva voce) போன்றவைகளை, அவைகளே நமக்காக நிர்வகித்து விடுகின்றன. முதுநிலைப் படிப்பை நடத்துவதற்கே போதுமான வசதிகளற்ற பல பல்கலைக்கழகங்கள், Ph.d மற்றும் Dsc போன்ற படிப்புகளைப் பணத்திற்காக வழங்கும் அவலங்கள் நடக்கின்றன.
பொதுவாக இதுபோன்ற பல்கலைகள், முக்கிய கல்வி நிறுவனங்களில் முயற்சித்து, அவற்றில் இடம்கிடைக்காத மாணவர்களையே குறிவைக்கின்றன.
எது நல்ல முனைவர் பட்டம்?
தீசிஸ்(Thesis) பணியுடன், தீவிரமான கோர்ஸ்வொர்க் பணியையும் ஒரு நல்ல Ph.d எதிர்பார்க்கிறது. உதாரணமாக, டெல்லி பல்கலையை எடுத்துக்கொண்டால், செமினார் மற்றும் ஆராய்ச்சி பேப்பருடன், சராசரியாக, 5-7 அசைன்மெண்டுகளை ஒரு முனைவர் பட்ட மாணவர் மேற்கொள்ள வேண்டும். திருவனந்தபுரத்திலுள்ள மேம்பாட்டு படிப்புகளுக்கான மையம் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம் போன்றவை, பலவிதமான ஆராய்ச்சி முறைகளைக் கொண்டவை. இந்நிறுவனங்களில், 2 வருடங்களில் 18-24 அசைன்மெண்டுகளை முடிக்க வேண்டும். கோர்ஸ்வொர்க், ஒரு ஆராய்ச்சி மாணவரின் பாட அறிவை மேம்படுத்தி, அவரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, தீசிஸ் தரங்களும் வேறுபடும். Ph.d பட்டம் பெறுவதற்கு, மேற்பார்வையிடப்பட்ட வெளியீடுகள் அவசியம் என்ற விதிமுறை எங்குமே தற்போது இல்லை. அப்படி இருந்தால், ஒரு ஆராய்ச்சி மாணவர் தரம் குறைந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்கலாம்.
முனைவர் பட்டத்திற்கான விதிமுறைகள்
இந்திய கல்வி முறையில், முனைவர் பட்டம் என்பது ஒருவருடைய கல்வியின் உச்சநிலையைக் குறிக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு UGC வெளியிட்ட விதிமுறைகளின்படி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக ஒருவர் நியமிக்கப்பட, அவர் NET/SET போன்ற தேர்வுகளில் தேறியிருக்க வேண்டும். அதேசமயம், ஒருவர் UGC விதிகளின்படி Ph.d பெற்றிருந்தால், அவர் NET/SET தேர்வுகளை எழுவதிலிருந்து விலக்களிக்கப்படுவார் என்பதாகும். இதன்மூலம், பல்கலைகளில் பேராசிரியர் பணியைப் பெறுவதற்கு, Ph.d ஒரு முதன்மை அச்சாரமாக திகழ்ந்து வருகிறது.
Ph.d செய்வதற்கான மேற்பார்வையாளரை(Guide) தேர்வுசெய்ய UGC அளித்துள்ள சுதந்திரத்தை பலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் ஒருவரை தங்களின் மேற்பார்வையாளராக அமைத்துக் கொள்கிறார்கள். அதேசமயம், ஒருவர் முனைவர் பட்டப் படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு மற்றும் ஸ்கிரீனிங் டெஸ்ட் முடிவுகள் மற்றும் 6 மாத முழுநேர, Ph.d -க்கு முந்தைய கட்டாய கோர்ஸ்வொர்க் பணியுடன், நேர்முகத் தேர்விலும் கலந்துகொள்ள வேண்டும்.
இதனடிப்படையில், Ph.d படிப்பிற்கு நேரடி சேர்க்கை என்பது UGC விதிமுறையில் இல்லை. ஆராய்ச்சி மாணவரால் வழங்கப்படும் தீசிஸ், குறைந்தபட்சம் 2 நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்த நிபுணர்களில் ஒருவர், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். UGC -ன் இந்த விதிமுறை வெளியான பிறகு, பல மாநில பல்கலைகள், தங்களது Ph.d ஆய்விற்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்த ஆரம்பித்தன மற்றும் சில பல்கலைகள், Ph.d படிப்பை வழங்குவதற்கான தங்களின் நடைமுறைகளில் மாற்றம் செய்துள்ளன.
தொலைநிலை முறையில் முனைவர் பட்டம்
கடந்த 2009ம் ஆண்டின் UGC விதிமுறையின்படி, எந்த கல்வி நிறுவனமும், தொலைநிலைக் கல்வி மூலமாக M.phil அல்லது Ph.d படிப்புகளை வழங்கக்கூடாது. அதேசமயம், திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள், மேற்கூறிய படிப்புகளை தொலைநிலை முறையில் வழங்கலாம். அதேசமயம், அது UGC விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்.
தொலைநிலை முறையில் Ph.d மேற்கொள்ள, முதன்மை(Principal) கைடு, சம்பந்தப்பட்ட பல்கலையை சேர்ந்தவராகவும், இணை கைடு(Joint guide), வெளி பல்கலையை சார்ந்தவராகவும் இருக்கலாம். அதேசமயம், ஒரு இணை கைடு, தனக்கு கீழ், 2 மாணவர்களுக்கு மேல் வைத்துக்கொள்ளகூடாது.
தொலைநிலை முறையிலான Ph.d என்பது, நேரடி Ph.d போன்றே தரமானது என்று சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுமேற்கொள்ளும் மாணவர், அதுதொடர்பாக தெளிவான பார்வையைக் கொண்டிருப்பதே முக்கியமே தவிர, நேரடியானதா? தொலைநிலை முறையிலானதா? என்பது பிரச்சினையில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலஅளவு மற்றும் வருகைப்பதிவு
தற்போதைய நிலையில், பல பல்கலைகள், முனைவர் பட்டப்படிப்பிற்கு, குறைந்தபட்சம் 2.5 வருடங்களும், அதிகபட்சம் 4 வருடங்களும் நிர்ணயித்துள்ளன. அதேசமயம், சில சூழல்களில், ஒருவர் குறைந்தபட்சம் 2 வருடங்களிலும், அதிகபட்சம் 5 வருடங்களிலும் Ph.d பெறலாம். ஒரு ஆராய்ச்சி மாணவர், முழு நேரம் கவனமாக உழைத்தால், ஒரு தரமான தீசிஸ் தயாரிக்க குறைந்தபட்சம் 3 வருடங்கள் ஆகும்.
அதேசமயம், ஒரு பணிபுரியும் நபர், தொலைநிலை முறையிலான Ph.d மேற்கொள்வதை விட, பகுதிநேர அடிப்படையிலான முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம் என்று சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், இந்த பகுதிநேர Ph.d, முழுநேர முனைவர் பட்ட ஆய்வைப் போன்றதுதான் மற்றும் தீசிஸ் சமர்ப்பிக்க கூடுதலாக 1 வருடம் எடுத்துக்கொள்ளும், மற்றபடி பிரச்சினையில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
முனைவர் பட்டப்படிப்பை வழங்க, பல்கலைகளுக்கு குறிப்பிட்டளவில் சுதந்திரம் இருந்தாலும், UGC விதிமுறைகளின்படி இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல், Ph.d பட்டம் பெற்றவர், தனது வேலைவாய்ப்பினை பெறும்போது சிக்கலை எதிர்கொள்வார்.
கட்டணம் மற்றும் உதவித்தொகை
கட்டணம் வசூலிப்பதில், அரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, Humanities படிப்பில் Ph.d செய்ய ஒரு அரசு கல்வி பல்கலையில் வருடத்திற்கு ரூ.10,000 முதல் 20,000 வரையே செலவாகும். ஆனால், தனியார் பல்கலையில், வருடத்திற்கு ரூ.50,000 முதல் 1,00,000 வரை செலவாகும்.
அதேசமயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களுக்கு, கட்டணம் இன்னும் அதிகரிக்கும். மேலும், UGC - JRF போன்ற அரசு உதவித்தொகைகள், அரசு மற்றும் தனியார் பல்கலைகள் ஆகிய இரண்டிலும் கிடைக்கின்றன.
ஆங்கிலத்தில் தீசிஸ் நகல்
ஆங்கிலத்தில் தீசிஸ் நகலை சமர்ப்பிப்பதை, UGC கட்டாயமாக்கியுள்ளது. ஒருவர் எந்த மொழியில் ஆய்வுசெய்து, கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தாலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நகலை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு
இறுதியாக சொல்வது என்னவென்றால், ஒருவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கு முன்பாக, அப்போது இருக்கும் UGC விதிமுறைகளை நன்கு தெரிந்துகொள்ளவும். அப்போதுதான், அவர்களின் காலம், உழைப்பு மற்றும் பணம் ஆகியவை விரயமாகாமல் இருக்கும்.
மேலும்,
* சம்பந்தப்பட்ட பல்கலையின் அங்கீகாரத்தை ஆராய வேண்டும்.
* தகுதிவாய்ந்த மேற்பார்வையாளர்கள், அந்தப் பல்கலையில் கிடைப்பார்களா? என்பதை அறிய வேண்டும்.
* ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் அந்த பல்கலையின் கடந்தகால சாதனைகள்
* இந்திய பல்கலைக்கழகங்களின் அமைப்பில் அந்த பல்கலை உறுப்பினராக உள்ளதா? என்று உறுதி செய்தல்.
