ஜன 18, 2012 12:00 AM
ஜன 18, 2012 12:00 AM
மேலாண்மை கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாக இருந்தாலும்கூட, அப்படிப்பிற்கான புகழ் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, ஒவ்வொரு ஆண்டும் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, கடந்த 2007ம் ஆண்டு இருந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 1,132. ஆனால் தற்போது அவை 2,385 என்ற அளவிற்கு பெருகியுள்ளது. 5 வருடங்களுக்குள் எண்ணிக்கை 2 மடங்காக பெருகியுள்ளது. இதைத்தவிர, உலகளவிலும், இந்திய அளவிலும் நிலவிய மற்றும் நிலவும் பொருளாதார மந்த நிலையும் ஒரு காரணம்.
மேலாண்மை படிப்பை மேற்கொள்வதற்கு முன்பாக பலவிதமான அம்சங்களை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. 2 வருடங்களைக் கொண்ட எம்பிஏ படிப்பானது, ஒரு சாதாரண மனிதனை, ஒரு தேர்ச்சிபெற்ற மேலாண்மை நிர்வாகியாக மாற்றிவிடுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. ASSOCHAM எடுத்த ஒரு சர்வேயில், நாட்டின் 30 முக்கிய வணிகப் பள்ளிகளைத் தவிர, மற்றவை, தற்போதைய தேசிய மற்றும் சர்வதேசிய பொருளாதாரங்களைப் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூட கவலைப்படாதவைகளாக உள்ளன. அங்கே, எதிர்பார்ப்புகளுக்கும், முடிவுகளுக்கும் இடையே அதிக வித்தியாசம் நிலவுகின்றன. சுமாரான பெயருடைய வணிகப் பள்ளிகள் வழங்கும் முடிவுகள், சந்தேகத்துக்குரியவை.
எம்பிஏ படிப்பதற்கான தகுதி
உலகிலுள்ள பல புகழ்பெற்ற வணிகப் பள்ளிகள், பணி அனுபவம் இல்லாத நபர்களின் எம்பிஏ படிப்பிற்கான விண்ணப்பங்களை கண்டுகொள்வதேயில்லை. ஆனால், உள்நாட்டு வணிகப் பள்ளிகள் இந்தவித கலாச்சாரத்திலிருந்து விலகியே இருக்கின்றன. பணி அனுபவம் இன்றி எம்பிஏ முடிக்கும் ஒரு மாணவர், நல்ல சம்பளத்திற்கு வேலை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார். எனவே, 2 அல்லது 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்று அதன்பிறகு எம்பிஏ படிப்பது மிகவும் சிறந்தது.
கேம்பஸ் இன்டர்வியூ சம்பளம்
கேம்பஸ் இன்டர்வியூ, சம்பள பேரத்திற்கு அதிக வாய்ப்புகளைத் தருவதில்லை. பொதுவாக, கேம்பஸ் இன்டர்வியூ முறையில் அறிவிக்கப்படும் சம்பள விகிதங்கள், சந்தை நிபுணர்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஏற்கனவே பணி அனுபவமுடைய, அதேசமயம் முழுநேர எம்பிஏ படிப்பில் சேர்ந்து படித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு, ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அளவில் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அறிவிப்பை எதிர்கொள்வது ஒருவருக்கு கடினமாக உள்ளது.
கேம்பஸ் இண்டர்வியூ முறையில் இருக்கும் இன்னொரு சிக்கல் என்னவெனில், ஒரு புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் படித்து, 2 வருடங்களுக்கான டியூஷன் கட்டணமாக, 8-12 லட்சம் வரை செலவுசெய்த ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூவில், ஆரம்ப நிலையில், வருடத்திற்கு 7-9 லட்சம் வரையிலேயே சம்பள வாய்ப்பினை பெறுகிறார்.
புகழ்பெற்ற மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
அதிக கட்டணங்களுக்கு எம்பிஏ படிப்பை வழங்கும் நிறுவனங்கள், தங்களது மாணவர்கள் முக்கிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறுதலை உறுதிசெய்கின்றன. அந்த நிறுவனங்கள், மாணவர்களை பணிக்கு சேர்க்கும் முன்பாக பலவிதமான அம்சங்களை கருத்தில் கொள்கின்றன. படிப்பில் அவரது செயல்பாடு, பல்திறன் நடவடிக்கைகளில் அவரது பங்கேற்பு, தகவல்தொடர்பு திறன், வழங்குதல் திறன், விரைவாக சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், சரியான தீர்வுகளை முன்வைக்கும் திறன் போன்ற பல அம்சங்களை, ஒருவரை பணியில் அமர்த்துவதற்கு முன்பாக ஒரு நிறுவனம் சோதிக்கும்.
மேலும், பல நிறுவனங்கள், பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து, தங்களது பணிக்கேற்ப பயிற்சியளிக்கும் வேலையை செய்கின்றன.
நடுத்தரமாக பெயர்பெற்ற வணிகப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறைவாகவே கல்விக் கட்டணம் செலுத்துகிறார்கள், அதேசமயம், அனைவருக்கும் கேம்பஸ் இன்டர்வியூ பணிவாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மை இவ்வாறிருக்க, அத்தகைய தரத்தில் இருக்கும் பல வணிகப் பள்ளிகள், தங்களது மாணவர்கள் 100% வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதில்லை. மேலும், தங்களது மாணவர்கள் பெறும் சம்பள விகிதங்களை சராசரி மதிப்பிலேயே(Average) இவைகள் தெரிவிக்கின்றன, இடைமதிப்பு(Median) முறையில் அல்ல. இத்தகைய சாமர்த்தியங்களால், அந்தக் கல்லூரிகளின் மார்க்கெட் மதிப்பு உயர்கிறது.
மேலும், பல வணிகப் பள்ளிகள், ராங்கிங்(Ranking) தொடர்பாக மக்களை ஏமாற்றும் வேலையையும் செய்கின்றன. ஏனெனில், இத்தகைய ராங்கிங் மதிப்பீடானது, Placement -க்கு மட்டுமே அதிக மதிப்பெண்கள் கொடுக்கின்றன. மற்றபடி, அந்த வணிகப் பள்ளியில் உள்ள பிஎச்டி ஆசிரியர்கள், அதன் உள்கட்டமைப்பு வசதி மற்றும் வெளியிடப்பட்ட பேப்பர்ஸ் ஆகிய அம்சங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
முறையான மதிப்பீடு தேவை
பல கல்லூரிகள், தாங்கள் வாங்கும் கட்டணத்திற்கு ஈடாக, உரிய கல்வியை வழங்குவதில்லை. அக்கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டங்கள் மாறிவரும் சந்தை மற்றும் இதர வணிக சூழல்களுக்கு பொருந்துவனவாய் இருப்பதில்லை. இத்தகைய கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள், இறுதியில், கடன் சுமைக்கு ஆளாகிறார்கள். எனவே, செலவழிக்கும் பணத்திற்காகவாவது, நமது படிப்பு மதிப்பாய் இருக்க வேண்டும்.
வணிகப் பள்ளிகள் தொடர்பாக அரசின் விதிமுறைகள் எதுவும் இல்லாதது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக கல்வியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மேலாண்மை கல்வி நிறுவனம் பெற்றுள்ள AICTE அங்கீகாரத்தை மதிப்பீடு செய்வதற்கான ஒரு அளவுகோலும் நமக்கு தேவைப்படுகிறது என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் பணியை செய்யக்கூடிய National Board of Accreditation இன்னும் அதை தொடங்காமலேயே இருக்கிறது.
அவசரம் வேண்டாம்
பல வணிகப் பள்ளிகள், தங்களுக்கான தயார் நிலையிலுள்ள வளாகத்தை கொண்டிராமலேயே மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுகின்றன. பல வணிகப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், அதிக பொய் தகவல்களைக் கொண்டுள்ளன. எனவே, எம்பிஏ போன்ற மேலாண்மை படிப்புகளை மேற்கொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டியது இதுதான், "ஒருவர் எந்த வயதிலும், எப்போது வேண்டுமானாலும் எம்பிஏ படிக்க முடியும். எனவே, ஓரளவு பணி அனுபவத்தைப் பெற்றபிறகு, சிறப்பான கல்லூரியை சரியான வகையில் மதிப்பீடு செய்து தேர்ந்தெடுத்து, கல்விச் செலவை ஆராய்ந்து, எதிர்கால வாய்ப்புகளை மதிப்பிட்டு, அதன்பிறகு எம்பிஏ படிப்பை மேற்கொள்ள வேண்டும். அதுவே, புத்திசாலித்தனம்! எதற்கும் அவசரப்படக்கூடாது.
