மார் 15, 2012 12:00 AM
மார் 15, 2012 12:00 AM
நெட் தேர்வின் அனைத்துப் பிரிவுகளையும் ஆப்ஜெக்டிவ் முறையில் மாற்றியதற்கு, பல கல்வியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிப் பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடையவர்களுக்கு, மிகப்பெரிய சிம்மசொப்பனமாக விளங்கியது, நெட் தேர்வாகும். ஏனெனில், இத்தேர்வின் மூன்றாம் பகுதியில், விரிவாக எழுதக்கூடிய வகையில்(Descriptive type) வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். மொத்தம் 200 மதிப்பெண்களைக் கொண்ட அந்தப் பகுதியானது, பலருக்கும் சவாலானதாக விளங்கியது. ஏனெனில், குறிப்பிட்ட நேரத்திற்குள், கொடுக்கப்பட்டிருக்கும் இட அளவுக்குள் அந்த மூன்றாம் பகுதியை எழுத வேண்டும். இதனால்தான், லட்சக்கணக்கான நபர்கள் ஆண்டுதோறும் நெட் தேர்வை எழுதினாலும், சில ஆயிரங்களில் தேர்ச்சியடைவது கூட பெரிய விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஜுன், 2012 முதல், நெட் தேர்வின் அனைத்து பகுதிகளும், ஆப்ஜெக்டிவ் முறையிலேயே இருக்கும் என்று UGC அறிவித்தது. இதனால் மாணவர் சமுதாயம் மகிழ்ச்சியடைந்தது.
கல்வியாளர்கள் ஆட்சேபம்
நெட் போன்ற ஒரு திறன் மதிப்பீட்டு தேர்வை, முழுவதும் ஆப்ஜெக்டிவ் முறையிலேயே நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று பல கல்வியாளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.
வரலாறு உள்ளிட்ட சமூகவியல் படிப்புகள், இலக்கியப் படிப்புகள் போன்றவை, பகுப்பாய்வு மற்றும் திறனாய்வை அடிப்படையாகக் கொண்டவை. இதுதொடர்பாக, ஒருவரின் திறனை சோதிக்க எழுத்துத் தேர்வே சிறப்பானது. கேட்கப்பட்டிருக்கும் கேள்வியை மிகச் சரியாகப் புரிந்து, குறிப்பிட்ட அளவில் தெளிவாக விடையளிக்கும் திறமையை சோதிப்பதே, ஒரு பேராசிரியர் தகுதித் தேர்வில் முக்கியமானது. ஆனால், அனைத்தையும் ஆப்ஜெக்டிவ் முறையிலேயே 'டிக்' செய்துவிட்டு போய்விட்டால், ஒருவரின் பகுப்பாய்வு திறனை எவ்வாறு சோதிப்பது? என்று கல்வியாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதுபோன்ற தேர்வுமுறை தொழில்நுட்ப பாடங்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரும் என்பது பல கல்வியாளர்களின் வாதமாக உள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் Descriptive முறை தேர்வுகளை, விரிவான அளவில், மிகவும் சிறப்பான முறையில் கையாள்கின்றனர். அதனுடன் ஒப்பிடுகையில், நெட் தேர்வில் இருக்கும் Descriptive கேள்வி முறையானது, ஒரு விஷயமே கிடையாது. எனவே, நெட் தேர்வை மீண்டும் பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அடிக்கடி நிகழும் மாற்றங்கள்
நெட் தேர்வைப் பொறுத்தவரை, வருடாவருடம் ஒரு புதுப்புது மாற்றத்தை, UGC செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென்று ஒருதடவை Negative Marking system கொண்டுவரப்பட்டது. ஆனால், அடுத்தமுறை அது விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோன்று, மாற்றுத் திறனாளிகள், தாங்கள் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியில், OBC மாணவர்களுடன் வைக்கப்பட்டார்கள். ஆனால், பின்னர் அவர்கள், SC/ST பிரிவினருடன் சேர்க்கப்பட்டார்கள். எனவே, மாற்றம் என்பது அடிக்கடி நடந்துகொண்டே இருக்கிறது.
நெட் தேர்வெழுதும் மாணவர்கள் முக்கியமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு பிரிவிலும்(I, II, III) எடுக்க வேண்டிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைத்தான். மொத்தமான கூட்டுத்தொகை மதிப்பெண் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலத்தான் தனித்தனி பிரிவின் தகுதி மதிப்பெண்களும்.
