மார் 18, 2012 12:00 AM
மார் 18, 2012 12:00 AM
பூமத்திய ரேகை கோட்டிற்கு(Equator) அல்லது வெப்ப மண்டல பிரதேசத்திற்கு அருகே வாழும் மக்கள் கருப்பு நிறமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதே பூமத்திய ரேகைக்கு வெகு தொலைவில், ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மேனியாவின் பூர்வகுடி மக்களும் கருப்பு நிறத்தவர்களாகவே இருந்தார்கள்.
அதேசமயத்தில், சீனர்களை எடுத்துக்கொண்டால், அனைத்து சீனர்களும் நமக்கு ஒரேமாதிரியாக தெரிவார்கள். ஆனால், சீனாவின் வட பகுதியில் வாழும் மக்கள், உயரமானவர்களாகவும், வாட்டசாட்டமானவர்களாகவும், வெளிர் நிறமுடையவர்களாகவும், ஊசி மூக்கு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கும், திபெத் மற்றும் நேபாள மக்களுக்கும் உருவ ஒற்றுமைகள் உண்டு. ஆனால், தென்சீன மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் சிறிய மற்றும் சாய்ந்த கண்களை உடையவர்கள். வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் மக்களுடன் அவர்களுக்கு உருவ ஒற்றுமை உண்டு.
இத்தகைய தகவல்கள் உங்களின் ஆர்வத்தை தூண்டுகிறதா? மனிதர்களின் உருவம், மொழி, வாழ்க்கை மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உங்களை திகைக்க வைக்கிறதா? மனித இனத்தின் ரகசியங்களை அறிந்துகொள்வதில் தளராத ஆர்வமா?
சமூகத்தில் பிரபலமாக இருக்கும் அறுவை மற்றும் மானுட சிந்தனைகளை தூண்டாத படிப்புகளை புறந்தள்ளி விட்டு, Anthropology படிக்க புறப்படுங்கள்.
Anthropology என்றால் என்ன?
Anthropology என்பது மனிதனைப் பற்றிய அறிவியல் ஆகும். சில கல்வி நிறுவனங்கள் இந்தப் பாடத்தை சமூக அறிவியல் பிரிவின் கீழும், சில கல்வி நிறுவனங்கள் இதை அறிவியல் பிரிவின் கீழும் வைத்துள்ளன. கடந்தகால மற்றும் நிகழ்கால மனிதர்களைப் பற்றி படிப்பது Anthropology ஆகும். கடந்தகாலங்கள், தொல்லியல் மற்றும் Physical Anthropology ஆகியவை மூலமாகவும், நிகழ்காலம் என்பது, இப்படிப்பின், சமூக கலாச்சார(Socio - cultural) பிரிவின் மூலமாகவும் படிக்கப்படுகின்றன.
சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளுக்கும், நமக்குமுள்ள DNA வேற்றுமை வெறும் 1.6% மட்டுமே. மற்றபடி, 98.4% DNA -க்கள் ஒன்றாகவே உள்ளன. இந்த மிகச்சிறிய வித்தியாசம்தான், மனிதக் குரங்கிலிருந்து நம்மை, பெரியளவில் வித்தியாசப்படுத்துகிறது. நமது குரல்வளை மற்றும் நாக்கு அமைப்புதான், நமது பேசும் மற்றும் ஒலியெழுப்பும் திறனை, குரங்கிலிருந்து பெரிதும் வேறுபடுத்தியுள்ளன. இத்தகைய ஆய்வுகள், Physical or Biological பிரிவைச் சார்ந்தது.
சமூக கலாச்சார Anthropology என்பது ஒரு வேறுபட்ட துணைப் பிரிவாகும். அதேசமயம், மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர் Linguistic Anthropologist ஆவார். Anthropology என்பது, பிறவகை பாடங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய பாடமாகும். வரலாறு, புவியியல், தொல்லியல், உயிரியல், சமூவியல் உள்ளிட்ட பலவிதமான பாடங்களை Anthropology உள்ளடக்கியுள்ளது.
இளநிலை விலங்கியல் படிக்கும் பல மாணவர்கள், தங்களது முதுநிலைப் படிப்பில், Anthropology பாடத்தை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். அவர்களின் சுவாரஸ்ய ஆர்வத்திற்கு தீனிபோடும் அம்சமாய் Anthropology திகழ்கிறது. இந்தப் பாடமானது, வேறு பல பாடங்களோடு ஒப்பிடுகையில், மிகவும் புதிய ஒன்று என்றே கூறலாம். ஏனெனில், காலனிய ஆதிக்க காலத்தில், பூர்வீக மனிதர்களின் தன்மைகளைப் பற்றி அறிய எழுந்த ஆர்வமே இத்துறையின் துவக்கம் என்று கூறப்படுகிறது. அதாவது, காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களைப் பற்றி அறிவதற்காக, காலனி ஆதிக்கத்தை செய்தவர்களுக்கான படிப்பாக Anthropology தோன்றியது.
இந்தப் பாடத்திற்குள் பல துணைப் பிரிவுகள் தோன்றியிருந்தாலும், நோக்கம் ஒன்றாகத்தான் உள்ளது. நாம் வாழும் உலகம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வை, ஒரு தனி மனிதனுக்கு வழங்கும் நோக்கம்தான் அது.
இது ஒரு சவாலான படிப்பா?
இப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், அறிவியல் அல்லது மானுடவியல் பிரிவுகளிலிருந்து வருகிறார்கள். முதுநிலைப் பட்டம் என்ற அளவில் Specialisation மேற்கொள்ளப்படுகிறது மற்றும் அதன்பிறகு, கல்வி நிலையங்களில் பணிபுரிய விரும்புபவர்கள், M.Phil மற்றும் Ph.D படிப்புகளை மேற்கொள்கிறார்கள்.
இப்படிப்பின் அறிமுக நிலையில், மாணவர்களுக்கு, உயிரியல், சமூக கலாச்சாரம், தொல்லியல், மொழியியல் Anthropology ஆகியவைப் பற்றிய அறிமுகம் வழங்கப்படுகிறது. அதேசமயம், Indian Anthropology என்று தனியான பாடமும் உள்ளது. www.ugc.ac.in/policy/anthro/an_2.pdf என்ற இணையதளத்தில் சென்றால், இளநிலை அளவில் கற்பிக்கப்படும் விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பாடமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளின் கல்வி நிறுவனங்களால் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. மேலும், பல கல்லூரிகளில் இந்தப் பாடங்கள் இல்லாததற்கு, இத்துறையில், இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமையே காரணம் என்று கூறப்படுகிறது. இத்துறையில், ஆசிரியர் பணியைப் பெறுவதும் சிக்கலாகவே உள்ளது. ஏனெனில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் அவ்வளவு எளிதாக உருவாக்கப்படுவதில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவை பணத்திற்காகவே இயங்குபவை. எனவே, இப்படிப்பில் தேவையான பணம் கிடைக்காது என்பதால், இப்படிப்பை வழங்க அவை விரும்புவதில்லை. பல வெளிநாட்டுப் பல்கலைகளைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கக்கூடிய, பணம் கொட்டும் MBA படிப்புகளை வழங்கவே ஆர்வம் காட்டுகின்றன. மேலும், இப்படிப்பிற்கான ஆய்வகம் அமைப்பது செலவு வாய்ந்த ஒரு விஷயமாக உள்ளது. எனவேதான், பல தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள் இப்படிப்பிலிருந்து விலகியே நிற்பதாக கூறுகின்றனர்.
மேலும், மாணவர்களின் ஆர்வம் பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. படிப்பு என்பதே நல்ல சம்பளம் கிடைக்கும் பணியை பெறுவதற்குத்தான் என்பது சமூக மனப்போக்காக மாறிவிட்டதால், இப்படிப்பில் சேர தேவையான மாணவர்கள் முன்வருவதில்லை. அவர்கள் மேலாண்மைப் படிப்புகளையும், மருத்துவப் படிப்புகளையும், பொறியியல் படிப்புகளையுமே குறிவைக்கின்றனர். ஏனெனில், இவை அனைத்திலும் நன்றாக சம்பாதிக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி, வித்தியாசமான சிந்தனையும், மானிட இனத்தின்பால் ஆர்வமும் உள்ள மாணவர்கள் மட்டுமே இப்படிப்பை தேர்வு செய்கின்றனர்.
